பணி நிரந்தரம் செய்ய கோரி அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் 3 பெண் ஊழியர்கள் உட்பட 4 பேர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலைக்கல்லூரி உள்ளது. இங்குள்ள சுயநிதி பிரிவில் கடந்த 12 ஆண்டுகளாக கேஷியராக தனலட்சுமி, மகாதேவி, கலைச்செல்வி, சுகஸ்கலா, விஜயகுமார் ஆகியோர் கேஸியராகவும், நூலகராகவும், அலுவலக உதவியாளர்களாக 9 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், சமீபத்தில் பணியில் சேர்ந்தவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை கல்லூரி செயலர் பணி நிரந்தரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்தும், பணி நிரந்தரம் செய்ய கோரியும் கடந்த 17ம் தேதி முதல் தனலட்சுமி, மகாதேவி, கலைச்செல்வி, விஜயகுமார் ஆகியோர் கல்லூரி முன்பு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மூன்றாவது நாளான நேற்று, கல்லூரி செயலாளர் ராமசாமி பேச்சுவார்த்தைக்கு அழைப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால், அவர் அழைக்காததால் மனமுடைந்த ஊழியர்கள் 4 பேரும், நேற்று காலை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக அறிவித்து கல்லூரி மாடிக்கு சென்றனர். இதனைக் கண்ட பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மாடிக்குச் சென்று அவர்களை தடுத்தி நிறுத்தினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை மற்றும் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் அவர்களை மாடியில் இருந்து கீழே அழைத்து வந்தனர். இதனால் கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இவர்களுக்கு ஆதரவாக கல்லூரி முதல்வர் (பொ) பாண்டியராஜ் தலைமையில் ஒட்டுமொத்த சுயநிதி பிரிவு பேராசிரியர்கள் மற்றும் 1,500 மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது.
கல்லூரி முதல்வர் (பொ) பாண்டியராஜ் கூறுகையில், ‘‘தேவாங்கர் கலைக்கல்லூரி செயலாளர் பதவி காலம் கடந்த மாதம் முடிவடைந்தது. ஆனால், கல்லூரி செயலர் பதவியில் நீடித்து வருகிறார். இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. கல்லூரியில் ஆசிரியர் மற்றும் மற்ற பணியிடங்களுக்கு ஊழியர்களை நியமனம் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. மேலும், அரசு உதவி பெறும் பிரிவில், 3 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியது தொடர்பாக எனது மறுப்பை எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளேன். கல்லூரி செயலாளர் பேராசிரியர்களை அவமரியாதை செய்கிறார்,’’ என்றார். இக்கல்லூரியில்தான் பாலியலுக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.