திருவாரூர் அருகே சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களை விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் மேலாக தூக்கி செல்லும் அவலநிலையால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் ஆப்பரக்குடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கான சுடுகாடு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வயல்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. இதனால், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக யாராவது இறந்தால், வயல்களின் வழியேதான் சடலத்தை கொண்டு செல்லும் சூழல் உள்ளதாக கூறுகின்றனர் ஆப்பரக்குடி கிராம மக்கள்.
அப்பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை தூக்கி கொண்டு சென்ற இறுதி ஊர்வலம், சம்பா பயிர்களுக்கு இடையே சென்றது. சுடுகாட்டிற்கு செல்ல உரிய பாதை அமைக்கக்கோரி பல முறை மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஊரில் யாரேனும் இறந்தால், அந்த கவலையை விட சடலத்தை எப்படி மயான கொண்டு செல்லப்போகிறமோ என்ற கவலையே அதிகமாக இருப்பதாக வருத்தப்படும் ஆப்பரக்குடி கிராம மக்கள், தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.