Home /News /tamil-nadu /

ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டுவர பெரும்பாலான மாநிலங்கள் விரும்பவில்லை - எல்.முருகன்

ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டுவர பெரும்பாலான மாநிலங்கள் விரும்பவில்லை - எல்.முருகன்

எல்.முருகன்

எல்.முருகன்

மீன்வளத்துறை சார்பில் சிறப்பு பொருளாதார கடற்பாசி பூங்கா ரூ.3 லட்சம் கோடி மதிப்பில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜி.எஸ்.டி யின் கீழ் பெட்ரோல் டீசலை கொண்டுவர பெரும்பாலான மாநிலங்கள் விரும்பவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

‘மக்கள் ஆசி யாத்திரை’ என்ற பயணத்தை கடந்த 16ஆம் தேதி கோவையில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கினார். யாத்திரையை சேலத்தில் நிறைவு செய்யப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், “மிகவும் எளிய குடும்ப பின்ணணியைக் கொண்ட முதல் தலைமுறை அரசியல்வாதிகளான 43 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையில் இடம் அளித்துள்ளார். எங்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் மிக முக்கியமான நிகழ்வை தடுக்கும் வகையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சதி செய்து தடுத்து விட்டனர். மக்களை நேரடியாக அமைச்சர்கள் சந்திக்கும் வகையில், நாடு முழுவதும் ‘மக்கள் ஆசி யாத்திரை’ நடத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் நலத்திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை நேரில் சந்திக்கும் வகையில் தமிழகத்தில் நடைபெற்ற ஆசி யாத்திரை நிறைவடைந்துள்ளது. மூன்று நாட்களில் 6 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை 169 நிகழ்வுகளில் சந்தித்துள்ளோம். 326 கிலோமீட்டர் தூரம் பயணித்து நடத்தப்பட்ட இந்த யாத்திரையில் மக்கள் ஏகோபித்த வரவேற்பு அளித்துள்ளனர். அவர்களின் ஆசிர்வாதத்துடன் தமிழகத்திற்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்தவும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் திட்டங்களில் தமிழகம் அதிகப் பயனாளர்களை கொண்ட மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே ராணுவத் தளவாட உதிரிபாக தொழில் வழித்தடம் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், சென்னை கோவை திருச்சி சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெருகும்.

மீன்வளத்துறை சார்பில் சிறப்பு பொருளாதார கடற்பாசி பூங்கா ரூ.3 லட்சம் கோடி மதிப்பில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் கால்நடைத்துறை மூலம் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியை மேம்படுத்த ரூ.54 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை மேம்பாட்டுக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு மத்திய அரசின் சார்பில் சுமார் ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

2014-க்கு பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் கூட தாக்கப்படவில்லை. பிரச்சினை வரும் போது இலங்கை அரசுடன் பேசி தீர்வு காணப்பட்டு வருகிறது.மீனவர் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்படும். கடந்த காலத்தில் இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் நான்கு பேரை அதிலிருந்து மீட்டுள்ளோம்.ஜி.எஸ்.டி யின் கீழ் பெட்ரோல் டீசலை கொண்டு வர பெரும்பாலான மாநிலங்கள் விரும்பவில்லை. தமிழகத்தில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப் படி திமுக நடந்து கொள்ளவில்லை. பெட்ரோலுக்கு ரூ.5 குறைப்போம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு ரூ.3 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல டீசல் விலை குறைக்கப்பட வில்லை.

Must Read : குற்றவாளிகளுக்கு ஆதரவான அரசு திமுக - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மகளிருக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியை செயல்படுத்துவதற்கான விவரங்கள் நிதிநிலை அறிக்கையில் இல்லை. மேலும், கல்விக்கடன், பயிர்க்கடன் குறித்தும் அறிவிப்பு இல்லை. மொத்தத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாகவே திமுக உள்ளது என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை, கயிறு வாரிய முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Published by:Suresh V
First published:

Tags: GST, L Murugan, Petrol-diesel

அடுத்த செய்தி