கிடுகிடுவென உயர்ந்துள்ள விலைவாசியை திமுக அரசு கட்டுப்படுத்த வேண்டும் - எல். முருகன்

எல். முருகன்

அன்றைய முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் எடுத்த நடவடிக்கையை அவரது மகனாகிய தற்போதைய திமுக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் ஏன் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.

 • Share this:
  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனி கவனம் செலுத்தி, சிமெண்ட் விலை முதல் அனைத்து கட்டுமான பொருட்களின் விலையயும், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலையையும்  கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெரும் தொற்று காரணமாக மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து, வருமானத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர். இந்த நேரத்தில் விலைவாசி உயர்வு, அவர்களுக்கு மேலும் ஒரு பெரிய சுமையாக அமைந்துள்ளது. குறிப்பாக திமுக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எடுத்த எடுப்பிலேயே கட்டுமான பொருட்களின் விலை கட்டுப்பாடுகள் இல்லாமல் உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு மூட்டை சிமெண்ட் விலை திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 370 ரூபாயாக இருந்தது. அது இப்போது 520 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்து விட்டது.

  நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒரு மூட்டை சிமெண்ட் 370 முதல் 390 ரூபாய் வரையில்தான் உள்ளது. தலைநகர் டெல்லியில் கூட, ஒரு மூட்டை சிமெண்ட் 350 ரூபாய்க்குதான் விற்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை 520 ரூபாய்க்கு அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சிமெண்ட் விலையை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து கட்டுமான பொருள்களின் விலையும், அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. 5,000 ரூபாயாக இருந்த ஒரு யூனிட் எம் சாண்ட்டின் விலை, இப்போது 6,000 ரூபாய்க்கும் அதிகமாக போய்விட்டது. ஒரு யூனிட் ஜல்லி (முக்கால் இஞ்ச்) 3,600 ரூபாயாக இருந்தது. அது இப்போது 4,200 ரூபாய்க்கும் மேல் சென்று விட்டது. கட்டிடங்கள் கட்ட பயன்படும் கம்பி விலையானது, திமுக ஆட்சிக்கு முன்பு ஒரு டன் 18,000 ரூபாயாக இருந்தது. அது இப்போது 75,000 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

  ஒரு லோடு செங்கல் 18,000 ரூபாயாக இருந்தது. அது இப்போது 24 ஆயிரம் ரூபாயை கடந்து சென்றுவிட்டது. அதாவது 2012- ஆம் ஆண்டு ஒரு லோடு செங்கல் விலை 9,500 ரூபாயாக இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் அது படிப்படியாக உயர்ந்து 18,000 ரூபாயாக ஆனது. ஆனால் கடந்த ஒரே மாதத்தில் ஒரு லோடு செங்கல் 6,000 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

  கடந்த திமுக ஆட்சியின்போது, மூட்டைக்கு 180 ரூபாயாக இருந்த சிமெண்டின் விலை, படிப்படியாக உயர்ந்து 2008-ஆம் ஆண்டு 280 ரூபாயை தொட்டது. இதனால் அப்போது கட்டுமான திட்டங்கள் அனைத்தும் முடங்கின. இதனைத்தொடர்ந்து அப்போதைய முதல்வர் திரு.கருணாநிதி அவர்கள், “சிமெண்ட் ஆலைகள் அனைத்தும் அரசுடமையாக்க படுவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று அறிவித்தார். அதன்பிறகு சிமெண்ட் உற்பத்தியாளர்கள் விலையை குறைத்தனர். கடந்த அதிமுக ஆட்சியின் போதும் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அவ்வப்போது விலையை உயர்த்தினார்கள். ஆனால் அரசு தரப்பில் கிடுக்கிப்பிடி போட்டதால் விலை கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

  இந்த நிலையில் மீண்டும், திமுக ஆட்சி அமைந்ததும் அதிரடியாக சிமெண்ட் விலையை அதிக அளவு உயர்த்தி உள்ளார்கள். ஆனால் அன்றைய முதல்வர் திரு.கருணாநிதி அவர்கள் எடுத்த நடவடிக்கையை அவரது மகனாகிய தற்போதைய திமுக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் ஏன் எடுக்கவில்லை என்று தெரியவில்லை. மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் அம்மா சிமெண்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஒரு மூட்டை சிமெண்ட் 226 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதற்கு மக்களிடம் பேராதரவு கிடைத்தது. ஆனால் இப்போது அம்மா சிமெண்ட் திட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை.

  Must Read : சென்னையில் நான்கு சுங்கச்சாவடிகள் அகற்றப்படுகிறதா? அமைச்சர் நேரில் ஆய்வு!

  சிமெண்ட் உட்பட கட்டுமான பொருட்கள் விலை உயர்வு மட்டுமல்லாமல், அன்றாடம் தாய்மார்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய், சமையல் பொருள்கள், காய்கறிகள் விலையும் அதிகரித்து விட்டது. திடீரென ஏற்பட்டுள்ள இந்த விலைவாசி உயர்வால், அனைத்து தரப்பு மக்களும் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இந்த கோரோனோ பெருந்தொற்று காலத்தில், திடீரென பல்வேறு பொருட்களின் விலையை அதிகமாக உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. ஏற்புடையது அல்ல.

  எனவே தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள், உடனடியாக இதில் தனி கவனம் செலுத்தி, சிமெண்ட் விலை முதல் அனைத்து கட்டுமான பொருட்களின் விலையையும் உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோல காய்கறி விலைகள், சமையல் எண்ணெய் விலைகள் மற்றும் இதர பொருட்களின் விலையையும் உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு எல்.முருகன் கூறியுள்ளார்.
  Published by:Suresh V
  First published: