காங்கிரஸில் இருந்து நான் பேசியதெல்லாம் மனசாட்சி இல்லாமல் பேசியது - குஷ்பு

குஷ்பு

காங்கிரஸில் இருந்து நான் பேசியதெல்லாம் மனசாட்சி இல்லாமல் பேசியது தான் என்று பா.ஜ.கவில் இணைந்து குஷ்பு விளக்கமளித்துள்ளார்.

 • Share this:
  பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது ரொம்ப மகிழ்ச்சி. இந்த நாட்டுக்கு நல்லது செய்கிறோம் என்று முன்பு இருந்த கட்சியில் நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அது இல்லை என்பது புரிந்தது. அதனால் நிதானமாக யோசித்து பா.ஜ.கவில் இணைந்து உள்ளேன். தாமரை ஒவ்வோர் இடத்திலும் மலர வேண்டும் என்ற ஆசையில் பாஜகவில் இணைந்துள்ளேன்.
  மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான் எனது கொள்கை. கடந்த காலத்தில் ’இலங்கை தமிழர்கள் தீவிரவாதிகள்" என்று குறிப்பிட்டீர்கள் தற்போது உங்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு நான் அதே நிலைப்பாட்டில் உள்ளேன் என்று கூறினார்.

  பெரியார் பெண்களுக்காக குரல் கொடுத்தவர். அதை தான் நான் விரும்புகிறேன். ஆனால் அவர் எல்லா கருத்துக்களையும் நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். பெரியார் கொள்கைபடி தேர்தல் பாதை செல்லக்கூடாது. அவர் அரசியல் வேண்டாம் என்று கூறியவர். ஆனால் தி.மு.க அரசியல் தான் பேசுகிறது என்ற அவர் நான் பதவிக்காக பா.ஜ.கவுக்கு வரவில்லை என்றார்

  தொடர்ந்து பேசிய குஷ்பு, ‘நேற்று முதல் காங்கிரஸ் கட்சியினர் ரூ.2 தந்து எனக்கு எதிராக ட்வீட் போடச் செய்யும் வேலையை தொடங்கிவிட்டனர். ஓரிடத்தில் இருக்கும் வரை அந்த இடத்துக்கு விசுவாசம் காட்ட வேண்டும். அதன் அடிப்படையில் 5-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றேன். ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவதே எதிர்க்கட்சியின் கொள்கை. எதிர்க்கட்சியில் இருந்தால் எதிர்த்து தான் ஆக வேண்டும்.

  பா.ஜ.க நிறைவேற்றிய அனைத்து திட்டங்களையும் தொடங்கியது காங்கிரஸ் தான். நேற்று தான் கட்சியில் இணைந்து உள்ளேன். உடனே தேர்தலில் இறங்க போறேன் என்று அர்த்தம் இல்லை. எனக்கு முன்பே, ஏற்கனவே பா.ஜ.கவில் இருக்கிறவர்களுக்கு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் அவர்களுக்கு தெரியும்.

  என் கணவர் கூறியெல்லாம் நான் பாஜகவில் சேரவில்லை. இப்படி பேசுவதெல்லாம் கேவலமான புத்தி. பிற கட்சியில் இருந்து விலகி வேறு யாரும் காங்கிரசில் சேரவில்லையா? திருநாவுக்கரசரே வேறு கட்சியில் இருந்து வந்தவர் தானே.

  காங்கிரஸில் இருந்து நான் பேசியதெல்லாம் மனசாட்சி இல்லாமல் பேசியது தான். பாஜக ஆட்சியில் ஒரு மீனவராவது உயிரிழந்துள்ளாரா? என்ற அவர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறியதால் தான் எனக்கு காங்கிரசில் பல பிரச்சனைகள் வந்தன. நல்லது செய்வதால்தான் பிரதமர் மோடி மக்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்துள்ளார்.


  முதல்வர் தாயார் மறைவுக்கு முதல்வரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிக்க இருப்பதாகவும் கூறினார். ஸ்டாலின் முதல்வர் ஆவதை மக்கள் தான் முடிவு செய்வர். ரஜினி தன் மீது காவி சாயம் பூச வேண்டாம் என்று கூறினாரே என்ற கேள்விக்கு நான் ஒன்றும் ரஜினியின் செய்தித்தொடர்பாளர் இல்லை என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: