ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆயிரம் விளக்கில் குஷ்புவுக்கு பெருகும் பெண்களின் ஆதரவு?

ஆயிரம் விளக்கில் குஷ்புவுக்கு பெருகும் பெண்களின் ஆதரவு?

குஷ்பு

குஷ்பு

ஆயிரம் விளக்கு தொகுதி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வரும் குஷ்பு, பெண்களின் வாக்குகளை குறி வைத்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நடிகை குஷ்பு களமிறங்கியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள குஷ்பு வீடு வீடாகச் சென்று வேட்பாளர்களைச் சந்தித்துவருகிறார். குறிப்பாக வாக்கு சேகரிப்பில் எளிமையுடன் தொகுதியில் வலம் வந்து வாக்காளர்களின் கவனத்தை குஷ்பு ஈர்த்து வருகிறார்.

பிரச்சாரத்தின் போது தம்பதியர் ஒருவரின் கோரிக்கையை ஏற்று அவர்களின் வீட்டு அடுப்பங்கரைக்குள் சென்று வீட்டில் இருந்த அனைவருக்கும் தேனீர் தயாரித்து கொடுத்து அசத்தினார். அதே போல நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நுழைந்து தோசை சுட்டு அசத்தினார். இப்படியாக தொகுதி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வரும் குஷ்பு, பெண்களின் வாக்குகளை குறி வைத்திருக்கிறார்.

திமுக, காங்கிரஸ் என 10 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டும் கிடைக்காத வாய்ப்பு பாஜகவில் இணைந்த பின்னர் குஷ்புவுக்கு கிடைத்துள்ளது. முதல் முறையாக தேர்தலில் போட்டியிட கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இதன் காரணமாகவே பெண்கள், மாணவர்களை குறிவைத்து ஆயிரம் விளக்கு தொகுதிக்கான பிரத்யேக தேர்தல் அறிக்கையை குஷ்பு வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கைக்கு தொகுதி மக்களிடையே ஆதரவும் பெருகி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஏழை எளிய குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்ற அறிவிப்பு மக்களின் ஆதரவை குஷ்புவுக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்னர் குஷ்புவுக்காக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது ஜெயலலிதா சந்தித்த அனைத்து அவமானங்களை தானும் அனுபவித்ததாகவும், காங்கிரஸ் கட்சியில் இருந்த போது ஸ்டாலின் தன் வீட்டுக்கு ஆட்களை அனுப்பி கல் வீசி தாக்கியதாகவும், சேலையை இழுத்து அசிங்கப்படுத்தினர் என்றும் தெரிவித்தார்.

பெண்களை குறி வைத்து குஷ்பு மேற்கொண்டு வரும் பரப்புரை அவருக்கு பலனளிக்குமா என்பது ஒரு புறம் இருந்தாலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் மிகுதியாக இருக்கும் இஸ்லாமிய பெண்களை ஈர்க்கும் விதமாக இஸ்லாமிய பெண்கள் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என தன் தொகுதி மக்களுக்காக குஷ்பு பிரத்யேக வாக்குறுதியை கொடுத்துள்ளார்.

பெண்களின் ஆதரவைப் குஷ்பு பெறுவார் என்றால் அது அவரின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கும் என்று கூறப்படுகிறது. எதிர் முகாமில் உள்ளவர்கள் பாஜகவுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: BJP, Kushboo, Thousand Lights Constituency, TN Assembly Election 2021