• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குஷ்புவின் அரசியல் பயணம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு!

குஷ்புவின் அரசியல் பயணம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு!

குஷ்பு

குஷ்பு

பாஜகவில் இணைந்த கையோடு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது...

  • Share this:
10 ஆண்டுகளாக தமிழக அரசியலில் இருக்கும் குஷ்பு வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக போட்டியிடுகிறார். ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு தீவிர பிரசாரம் செய்துவரும் நிலையில் அவரது அரசியல் பயணம் குறித்து ஒரு தொகுப்பை காணலாம்.

தமிழ் திரையுலகில், 80-களின் இறுதியில் கதாநாயகியாக அறிமுகமான குஷ்பு, 90-களில் முன்னணிக் கதாநாயகியாக வலம்வந்தார். கோயில் கட்டும் அளவுக்கு, கதாநாயகர்களுக்கு ஈடாக ரசிகர்களைக் கொண்டிருந்தவர் குஷ்பு. ஆனால் 2005-ம் ஆண்டு கற்பு குறித்து இவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தவே பல்வேறு விமர்சனங்களுக்கும், தூற்றுதல்களுக்கும் ஆளானார்.

இதைதொடர்ந்து 2010-ம் ஆண்டு திமுகவில் இணைந்த குஷ்பு, ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்று முடிவு செய்துவிட வேண்டாம் என பேசியது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சோனியா, ராகுல் முன்னிலையில் காங்கிரசில் ஐக்கியமானார். தேசிய செய்தித் தொடர்பாளராக பதவி வகித்த குஷ்பு, அப்போதைய மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார். இளங்கோவன் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு குஷ்புவின் மவுசும் காங்கிரசில் குறையத் தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியின் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க தமக்கு அழைப்பு விடப்படுவதில்லை என பகிரங்கமாகவே குற்றம் சாட்டிய குஷ்பு, ராகுலுக்கு பதில் சச்சின் பைலட் அல்லது ஜோதிராதித்ய சிந்தியாவை தேசிய தலைவர் ஆக்கலாம் எனக் கூறி தலைமையின் வெறுப்புக்கு ஆளானார். அத்துடன் பாஜக அரசு கொண்டு வந்த முத்தலாக், புதிய கல்விகொள்கை போன்றவற்றிற்கு ஆதரவும் தெரிவித்து சொந்த கட்சியினரின் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். காங்கிரசில் இனி குஷ்பு இருக்கமாட்டார் என பரவலாக பேசப்பட்ட போது, அதனை தொடர்ந்து மறுத்து வந்தவர் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

குஷ்பு பாஜக-வில் இணைந்த கையோடு மோடி, எச்.ராஜா குறித்து அவர் முன்பு பேசிய வீடியோக்களை எல்லாம் தற்போது தேடி பிடித்து பரப்பி வரும் நெட்டிசன்கள் அதைகொண்டு அவரை ட்ரோல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

எது எப்படி இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசியலில் இருந்தும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மட்டும் குஷ்புவுக்கு கிடைக்காமல் இருந்த சூழலில் பாஜகவில் இணைந்த கையோடு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Must Read : வன்முறையை தூண்டும் தி.மு.கவினரை கைது செய்யுங்கள் - குஷ்பு, பா.ஜ.க நிர்வாகிகள் காவல் ஆணையரிடம் புகார்

 

திமுகவின் கோட்டைகளில் ஒன்றான இத் தொகுதியில் வென்று செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு இவர் செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: