அன்பின் பெருமழையில் குழந்தைகளாக மாறும் கும்கிகள்: பார்த்துப்பார்த்து பராமரிக்கும் பாகன் பிரசாத்..(நெகிழ்ச்சி வீடியோ)

யானைகளை துன்புறுத்தாமல் அன்போடு பழகினால் அவை நம்மோடு குழந்தைகளைப் போல நெருக்கமாகும் என்று சொல்லும் பிரசாத், வெங்கடேஷை தன் குழந்தைகளில் ஒருவன் என்று சொல்லும்போது கண்கள் பனிக்கின்றன.

  • Share this:
உருவத்தில் பிரமாண்டமாக இருக்கும் யானைகள் மனதளவில் குழந்தையாகத்தான் இருக்கும் என்கின்றனர் கும்கி யானைகளை பாசமுடன் பராமரிக்கும் பாகன்கள்.

பிரமாண்ட முகம் காட்டும் கும்கி யானைகளை கட்டுப்படுத்தி வழிநடத்துவதில் பாகன்களின் பங்கு அதிகம். நாள்முழுதும் கூடவே இருக்கும் தங்களது பாகன்களிடம் நாளடைவில் குழந்தைகளாகவே மாறிப்போகின்றன யானைகள். இப்படி பொம்மன் என்னும் யானைப்பாகனுக்கும், மாணிக்கம் என்னும் கும்கி யானைக்குமான பந்தத்தை உயிர்ப்போடு பதிவு செய்த படம் கும்கி.

கும்கி திரைப்படத்தின் நேரடி சாட்சியாக இருக்கின்றனர் கோவை சாடிவயல் யானைகள் முகாமில் இருக்கும் கும்கி யானை வெங்கடேஷும், அதன் பாகன் பிரசாத்தும். அன்றாடம் யானைக்கு உணவிடுவது, குளிப்பாட்டுவது, அதனை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வது என பார்த்துப் பார்த்து பராமரிக்கும் பாகன் பிரசாத்திடம் பாசமழை பொழிகிறது யானை வெங்கடேஷ்.


பிரமாண்டமான யானையை தன் கட்டளைகளால் கீழ்ப்படிய வைத்த தனது உறவினர் ஒருவரைக் கண்டபின்பே இந்தப் பணியின் மீது ஆர்வம் ஏற்பட்டதாகக் கூறும் பிரசாத், தற்போது வெங்கடேஷைப் பராமரிப்பதில் மனநிறைவோடு தன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

ALSO READ : காற்றின் மூலம் கொரோனா தொற்று: அதிகம் பரவுவது எப்போது? - உலக சுகாதார அமைப்பு விளக்கம்.. பீதியில் மக்கள்..

பாகன் என்பது ஒரு பணி என்ற நிலைமாறி தற்போது பந்தமாகவே ஆகிவிட்டதாகச் சொல்லும் பிரசாத், அவசர வேலையாக ஊருக்குச் செல்ல நேர்ந்தால் கூட மனம் வெங்கடேஷைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் என்கிறார்.வெளியூர்களுக்கு லாரியில் அழைத்துச் செல்லும்போது, சற்று நேரம் ஓய்விற்காக லாரியை நிறுத்தினால் கூட, அதில் நின்றபடியே விளையாட ஆரம்பித்து விடுவான் என்று வெங்கடேஷின் குறும்புத்தனங்களைப் பற்றிச் சொல்லும் பிரசாத், காட்டு யானைகளை அடக்கச்செல்லும்போது தன் கட்டளைக்கு கீழ்ப்படிந்து விரட்டி அடிப்பான் என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.

யானைகளை துன்புறுத்தாமல் அன்போடு பழகினால் அவை நம்மோடு குழந்தைகளைப் போல நெருக்கமாகும் என்று சொல்லும் பிரசாத், வெங்கடேஷை தன் குழந்தைகளில் ஒருவன் என்று சொல்லும்போது அவரது கண்கள் பனிக்கின்றன.

 
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading