ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.. புதிய மாவட்டங்கள் கேட்கும் அன்புமணி

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.. புதிய மாவட்டங்கள் கேட்கும் அன்புமணி

அன்புமணி

அன்புமணி

கும்பகோணம் உள்பட புதிய மாவட்டங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை இன்று எழுதியுள்ளார்.  அதில், “தஞ்சாவூர் மாவட்டத்தின் முதன்மை நகரங்களில் ஒன்றான கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது அந்த பகுதிகளில் வாழும் மக்களின் முக்கியக் கோரிக்கை ஆகும். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது என்பது ஒருபுறமிருக்க, மாவட்டத் தலைநகரமாக அறிவிக்கப்படுவதற்கான அனைத்துத் தகுதிகளும், வசதிகளும் கும்பகோணம் நகருக்கு உண்டு” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளும் மாவட்டத் தலைநகரமாகவோ அல்லது மாவட்டத்தின் ஒற்றை மாநகராட்சியாகவோ திகழும் நிலையில், கும்பகோணம் மாநகராட்சிக்கு மட்டும் இவற்றில் எந்த பெருமையும் இல்லை. மாவட்டத் தலைநகரமாக திகழும் மாநகராட்சி என்ற பெருமையை கும்பகோணத்திற்கு வழங்க வேண்டும் என்பது தான் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்று கூறியுள்ள அவர், “தஞ்சாவூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கும்பகோணம் மாநகரில் தான் அமைந்துள்ளது. கும்பகோணம் மாநகரம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் சாலைவழியாகவும், தொடர்வண்டிப் பாதை வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து கும்பகோணத்திற்கு தொடர்வண்டிகளும், பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

மேலும், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப் படும் என்று வாக்குறுதி அளித்திருந்தீர்கள். அதை நிறைவேற்றுவதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது. தமிழ்நாட்டிலும் கும்பகோணம் உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் போது மாவட்ட நிர்வாகம் மேம்படும்; உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அரசு அமைக்க வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டங்களையும் பிரித்து, 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: Anbumani ramadoss, CM MK Stalin