மளிகை கடை உரிமையாளருக்கே தெரியாமல் ரூ.2000 டோக்கன் வழங்கிய வேட்பாளர்.. பொருள் வாங்க மக்கள் குவிந்ததால் பரபரப்பு

கும்பகோணத்தில் ரூ.2 ஆயிரத்திற்கு மளிகை பொருட்கள் என போலி டோக்கன் வழங்கி வாக்காளர்களை வேட்பாளர் ஏமாற்றி உள்ளார்.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்துள்ளது, இந்நிலையில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக  வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது ஓரளவு  கட்டுப்படுத்தப்பட்டது.

  இதனிடையே ஒரு சில இடங்களில் பாதுகாப்பையும் மீறி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா அரங்கேறியது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெரிய கடைத்தெரு  பாட்ராச்சாரியார் தெருவில் அமைந்துள்ள பிரியம் மளிகை ஏஜென்சி என்ற கடையில் பொதுமக்கள் சிலர் அந்தக் கடையின் பெயர் பொறித்து ரூ.2000 என குறிப்பிடப்பட்டிருந்த டோக்கனை கொண்டு வந்து அரசியல் கட்சியினர் பணத்திற்கு பதிலாக தங்கள் கடையில் இலவசமாக மளிகை பொருட்கள் வாங்கி கொள்ள டோக்கன் கொடுத்துள்ளதாக  கூறியுள்ளனர்.

  டோக்கனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் சேக் முகமது நான் யாருக்கும் டோக்கனிற்கு  மளிகை பொருட்கள் வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கவில்லை, தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறியுள்ளார். அப்போதுதான் அவர்களுக்கு இது போலி டோக்கன் என்பது தெரியவந்துள்ளது .ஆனால் தொடர்ந்து கூட்டம் அதிகரிக்கவே அவர் மளிகை கடையை பூட்டிவிட்டு, கடையின் கதவில் வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனிற்க்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த டோக்கனிற்க்கு எங்கள் கடை எந்த பொறுப்பும் ஏற்காது என பிரிண்ட் எடுத்து கதவில் ஒட்டி சென்றுவிட்டார்.

  இது குறித்து கடையின் உரிமையாளர் சேக்முகமது கூறும்போது, நான் கடந்த 25 வருடமாக இங்க கடை நடத்தி வருகிறேன். ஆனால் யாரோ  ஒருவர் வாக்காளர்களுக்கு டோக்கனை கொடுத்து உள்ளார். அந்த டோக்கன் கடை கொண்டு வந்து  பொருட்களை கேட்டனர். அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என  நான் கடையை பூட்டி அறிவிப்பு ஓட்டிவிட்டேன். கடந்த திங்கட்கிழமை முதல் இதுபோன்று டோக்கனை கொண்டு வருகிறார்கள் என தெரிவித்தார். அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு போலி டோக்கன் வழங்கி ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர் : எஸ்.குருநாதன், தஞ்சாவூர்
  Published by:Vijay R
  First published: