கூடங்குளம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களும் பாதுகாப்பாக உள்ளது என்றும், அங்கு அணுக்கழிவுகள் அபாயகர அளவுக்கு கீழே இருக்கிறது என்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கமளித்தார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது தி.மு.க உறுப்பினர்கள் ஞான திரவியம் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜிதேந்திர சிங், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் சில நாடுகளில் முன்பு விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால், இந்தியாவில் அணுமின் நிலையங்கள் மிகப் பாதுகாப்பாக உள்ளதாகவும் விளக்கம் அளித்தார். கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள் பாதுகாப்பான முறையில் பூமிக்கடியில் புதைக்கப்படுகிறது எனவும், கழிவுகள் பூமியிலிருந்து 15 மீட்டர் அடி தொலைவில் சேமிக்கப்பட்டு, 40 ஆண்டுக்கு பின் மறுசுழற்சி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார். சேமிக்கப்படும் கழிவுகள் 2022-க்குள் முழு கொள்ளளவை எட்டும் எனவும் ஜிதேந்திர சிங் பதில் அளித்தார். மற்ற நாடுகளைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பான முறையில் அணு உலை அமைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கூடங்குளம் அணு உலை கதிர் வீச்சால் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.
இந்திய அணு உலைகளில் குறைவான அளவே அணுமின் கழிவுகள் உற்பத்தியாவதால் இன்னும் சில காலத்திற்கு ஆழ்நிலக் கருவூலம் அமைக்க வேண்டிய அவசியம் எழாது என்றும் தெரிவித்தார். கூடங்குளத்தில் அபாயகர அளவில் அணுக்கழிவுகள் இல்லை. பிரான்ஸ் போன்ற நாடுகளில் குடியிருப்புப் பகுதிகளில் கூட அணுமின் நிலையங்கள் செயல்படுகின்றன. கூடங்குளத்தில் 15 மீ்ட்டருக்கும் கீழ் சேமிக்கப்படும் அணுக்கழிவுகளால் பாதிப்பில்லை. நீண்ட பரிசோதனைக்குப் பிறகே இத்திட்டங்கள் அமலுக்கு வந்தன. பல கட்டப் பரிசோதனைகளைக் கடந்து செயல்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார், ’ஆழ்நிலக் கருவூலம் அமைக்க அவசியம் எழாது என அமைச்சர் கூறியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது என்று கூறியுள்ளார்.
ஆழ்நிலக் கருவூலம் அமைப்பது அவசியமில்லை என்ற மத்திய அரசின் கூற்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் கூறியிருக்கிறார்.
இதனிடையே, கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கில், தேசிய அணுமின் கழகம் கூடுதல் அவகாசம் கேட்ட நிலையில், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.