பெயர் மாற்றுவதை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்டெடுங்கள் - பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

மோடி கே.எஸ்.அழகிரி

முந்தைய ஆட்சியாளர்கள் வைத்த பெயர்களை மாற்றும் நடவடிக்கைகளை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    விளையாட்டு துறையில் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 1991 - 1992-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு முதன் முறையாக இந்த விருது வழங்கப்பட்டது. லியாண்டர் பயஸ், சச்சின் டெண்டுல்கர், தன்ராஜ் பிள்ளை, மேரி கோம் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், கேல் ரத்னா விருதுக்கு மேஜர் தியான் சந்த் பெயரிட வேண்டுமென்று இந்தியா முழுவதிலிமிருந்து பல கோரிக்கைகள் எனக்கு வந்தது. அவர்கள் உணர்வை மதித்து கேல் ரத்னா விருது மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படும். ஜெய் ஹிந்த்“ என்று பதிவிட்டுள்ளார்.

    முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் அடையாளமுமாக இருக்கும் ராஜிவ் காந்தியின் பெயர் மாற்றப்பட்டதற்கு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று உலகத்தின் மிகச் சிறந்த தலைவராக விளங்கி, கணினித் துறையில் புரட்சிக்கு வித்திட்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் பெருமையை போற்றுகிற வகையில் ராஜிவ்காந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வந்தது. உலகமே வியக்கும் வகையில் ஆசிய விளையாட்டு போட்டியை டெல்லி 1982-ல் நடத்திய பெருமை ராஜிவ் காந்திக்கு உண்டு.

    60 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரம்மாண்டமான ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கை அமைத்த பெருமையும் அவருக்கு உண்டு. அந்த காலக்கட்டத்தில்தான் தலைநகர் டில்லியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதற்காக ராஜிவ்காந்தி அனைவரது பாராட்டையும் பெற்றார். இந்தப் பின்னணியில்தான் ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்பட்டு வந்தது.

    ராஜிவ் காந்தி பெயரில் வழங்கப்பட்டு வந்த இந்த விருதை மாற்றி வேறொருவர் பெயரில் மோடி அறிவித்திருப்பது அவரது அரசியல் காழ்ப்புணர்ச்சியையும், சிறுமைத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது. பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு பரந்த மனப்பான்மை இருக்கவேண்டும். கடந்த கால ஆட்சித் தலைவர்களின் பெயர்களை மாற்றிக் கொண்டே போனால், இன்றைய ஆட்சியாளர்கள் வைக்கிற பெயரை வருகிற ஆட்சியாளர்கள் மாற்றுவதற்கு மோடியின் நடவடிக்கை காரணமாக அமைவது மிகுந்த துரதிருஷ்டவசமாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இத்தகைய ஆரோக்கியமற்ற போக்கை கைவிட்டு, வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் பொருளாதார நிலையிலிருந்து நாட்டை காக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க மோடி முன்வர வேண்டும். எனவே, இந்த பெயர் மாற்ற அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த அறிவிப்பை மோடி திரும்பப் பெற்று, மீண்டும் பாரத ரத்னா ராஜிவ்காந்தியின் பெயர் கேல் ரத்னா விருதுக்கு தொடர நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published: