நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கினார். சென்னை சைதாப்பேட்டை தொகுதி 170-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் தென் சென்னை மத்திய மாவட்டத் தலைவர் முத்தழகனை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோட்டூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீடு வீடாக பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ‘மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் யாரையும் வேறுபடுத்தி பிரித்துப் பார்க்கக் கூடாது என்பது தான் காங்கிரஸின் கொள்கை.
நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியதை தொடர்ந்து, இன்றைக்கு சட்டமன்றம் கூட்டப்பட்டு மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தவிர அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி கொண்டு வரும் தீர்மானத்தை அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் ஒத்துக் கொள்கின்ற வகையில் செய்வதுதான் மாபெரும் ஆச்சர்யம்.
மோடி அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். நீட் வேண்டாம் என்று சொல்வதற்கு அரசியல் காரணம் அல்ல. மாணவர்களின் நலன் கருதி தான் சொல்கிறோம்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் எல்லாமே மாநில பாடதிட்டத்தில் தான் இயங்குகின்றது. ஆனால் நீட் தேர்வில் மத்திய பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. படிப்பது ஒரு பாடத் திட்டத்தில் கேள்வி கேட்பது இன்னொரு படத்தில் என்று சொன்னால் கிராமப்புற மாணவர்களும் அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் அவர்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.
அனிதாவால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. ஆகையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். மோடி அரசாங்கம் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கு இருக்கிற கலாச்சாரம், சமூகம், பொருளாதாரம், கல்வி ஆகியவற்றை புரிந்து நமது மக்களிடையே நிலவுகின்ற ஒற்றுமை அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். மோடி இதை தெரிந்து கொள்ளாமல் உத்தரப்பிரதேசம் எப்படி இருக்கின்றதோ அதே போல் தமிழகம் இருக்க வேண்டும் என்று வந்தால் அது தோல்வியில் முடியும். மத்திய அரசிற்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன்.
தன்னை ஹிட்லர், முசோலினி போல் நினைத்துக் கொண்ட மோடி தன்னை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டார். ஆனால் விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்று அவர் சட்டங்களை திரும்பப் பெற்று விட்டார். நாடாளுமன்றத்தில் அவரைப்போல அவமானப்பட்டவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
எப்படி விவசாயிகள் சட்டம் திரும்பப் பெற்றதோ, அதேபோல் நீட்தேர்வு சட்டமும் தமிழகத்தில் இருந்து திரும்ப பெறப்படும் சூழல் வரும். மாநில பாடத்திட்டத்தில் இருப்பவர்கள் எப்படி மத்திய பாடத்திட்ட கேள்விகளுக்கு பதில் எழுத முடியும்.
நீட் விலக்கு மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்... இன்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை
மத்திய அரசு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் உணர்வுகள் தான் நாட்டின் நாடித்துடிப்பு. ஆனால் ஆனால் பிரதமர் இதையெல்லாம் புரிந்துகொள்ள மறுக்கின்றார்.
ஆளுநர் இந்த ஆட்சிக்கும் ஆட்சி முறைக்கும் எதிரானவர்.
காவல்துறை பின்புலம் உள்ளவர்களை தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள மாநிலங்களுக்கு மட்டுமே ஆளுநர்களாக நிர்ணயிப்பார்கள். ஆனால் தமிழகம் ஜனநாயக முறையில் அனைத்தையும் மதிக்கும் மாநிலமாக இருக்கக்கூடியது. எனவே, அவரை திரும்ப பெற வேண்டும்’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.