இந்திய சுதந்திரத்துக்கு வித்திட்டவிநாயகர் சதுர்த்திக்கு தடையா: கிருஷ்ணசாமி கண்டனம்!

மாதிரிப் படம்

ஆங்கிலேயரை எதிர்த்து ஒன்று கூடுவதற்கும், சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், தங்களுடைய வழிபாட்டு உரிமைகளை மீட்டுக் கொள்வதற்கும் உண்டான ஒரே மார்க்கமாக இருந்தது விநாயகர் வழிபாடு மட்டுமே.

  • Share this:
    இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்டதே விநாயகர் சதுர்த்திதான் என்றும் அத்தகைய விழாவினை சொத்தை காரணங்களை கூறி தடை செய்யக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கையில்,  “இந்துக்களின் ஒவ்வொரு விழாவிற்குள்ளும் ஏதாவது ஒரு நல்ல அடிப்படை அம்சம் அல்லது காரணம் ஒளிந்திருக்கும். இறை நம்பிக்கையைத் தாண்டி இந்துக்களின் ஒற்றுமையையும், தேச ஒற்றுமையையும் வலியுறுத்துவதே விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு அம்சமாகும். இந்த உண்மை வரலாற்றைத் தெரிந்து கொள்ளாததால், இது குறிப்பிட்ட ஒரு தேசிய கட்சி அல்லது ஒரு முன்னணி அல்லது ஒரு சங்கத்தின் விழாவாக மட்டுமே சிலர் குறுக்கிப் பார்க்கிறார்கள். அது தவறு” என்று தெரிவித்துள்ளார்.

    கொரோனாவை  காரணம் காட்டி ஆண்டுதோறும் கோடான கோடி இந்துக்களால் அனுசரிக்கப்படக் கூடிய விநாயகர் சதுர்த்தி விழாவை தமிழகத்தில் அடியோடு ரத்து செய்வது என்பது முறையானது அல்ல என்று கூறியுள்ள கிருஷ்ணசாமி,  “சில கூடுதல் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி அளிப்பதே சரியானதாக இருக்க முடியும். அதை விடுத்து விநாயகர் சதுர்த்தியை வீட்டிற்குள் வைத்துத் தான் கொண்டாட வேண்டும்; வெளியில் சிலை வைக்கவோ, ஊர்வலமாக எடுத்துச் செல்லவோ, நீர்நிலைகளில் கரைக்கவோ அனுமதி இல்லை என மாநில அரசு தெரிவிப்பதை உள்நோக்கம் கொண்டதாகவே கருத முடியும். நாங்கள் ’திராவிட அரசு’; ’விநாயகர் சதுர்த்தி’ என்பது ’ஆரிய விழா’ என்றெல்லாம் ’இன வேறுபாடு’ காட்டி அதற்குத் தடை விதிக்கப்படுமேயானால் அது அபத்தமாகிவிடும்” என்று எச்சரித்துள்ளார்.

    இந்தியாவில் சாதி ரீதியாக பிளவுப்பட்டிருந்த  மக்களை ’இந்து’ என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வர கிராமம் முதல் நகரங்கள் வரை அனைத்து இந்துக்களாலும் கொண்டாடப்பட்டதே ’விநாயகர் சதுர்த்தி விழா’ என்று கூறியுள்ள அவர், “ சிலர் விவரம் தெரியாமல் இவ்விழா ’வடக்கிலிருந்து வந்தது, கிழக்கிலிருந்து வந்தது’ என எக்காளம் பேசுகிறார்கள். விநாயகர் சதுர்த்தி வெறும் கடவுள் பக்தியை மட்டும் உருவாக்க வந்ததல்ல. இந்தியத் தேசத்தின் மீதான பக்தியை உருவாக்கவும்; கிழக்கிந்திய கம்பெனி வழியாக இந்தியத் தேசத்தைக் கபளீகரம் செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கான ஒரு போர்த் தந்திரமாகவுமே ’விநாயகர் சதுர்த்தி விழா’ நாடெங்கும் பிரபல்யப்படுத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது தொடர்பாக தனது அறிக்கையில், “ 1857-ல் நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்குப் பிறகு, இந்திய மக்கள் மீது, குறிப்பாக இந்துக்கள் மீதான ஆங்கிலேயரின் பிடி மேலும் இறுகியது. மத ரீதியான காரணங்களைத் தவிர, 20 பேருக்கு மேல் கூட்டம் கூடவோ, பேசவோ தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனினும், மதரீதியாக நிறுவனப்படுத்தப்பட்டு விழிப்புடன் ஒன்றுபட்டுப் போராடியதாலும்; ஆட்சியிலிருந்த இஸ்லாமிய மன்னர்களின் பின்புலத்தாலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ’தொழுகை’ நடத்துவதற்கான உரிமையை ’இஸ்லாமியர்கள்’ மீட்டுக் கொண்டார்கள்.

    இதையும் படிங்க: திராவிட களஞ்சியம்- சங்கத் தமிழ் நூல்களில் பெயரை மாற்றும் முயற்சியா? அமைச்சர் விளக்கம்!


    ஆனால், இந்த மண்ணின் பூர்வீக குடிமக்களான இந்துக்களுக்கு நிறுவனப்படுத்தப்பட்ட மதமோ, அமைப்போ, வலுவான அரசியல் பின்புலமோ இல்லாததால் அவர்களால் ஒன்றுபடவும் முடியவில்லை; போராடவும் முடியவில்லை; சாதாரண வழிபாட்டு உரிமைகளைக் கூட நிலை நிறுத்திக் கொள்ளவும் முடியாமல் நிர்க்கதியாய் நின்றார்கள்.



    நாளுக்கு நாள் இந்துக்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்தன; இந்துக்களின் பெரும்பாலான மத சம்பிரதாய நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டன. இந்தியாவில் பல பகுதிகளில் கட்டாய மதமாற்றங்கள் நடந்தன. மதம் மாறியவர்களும் ’உண்மையாக விசுவாசத்துடன் இல்லை’ என முத்திரை குத்தப்பட்டு கோவா மாநிலத்தில் ’Goa Inquisition’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மதமாறிய இந்துக்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டனர். அதனால் நாடெங்கும் இந்தியர்கள் மத்தியில் அச்சமும், பீதியும் பற்றிக் கொண்டது. அரசியல் ரீதியாகவும்; மத ரீதியாகவும் ஒன்று கூடுவதற்குக் கூட வழியில்லாமல் இருந்தது.

    மேலும் படிக்க: சமூகநீதி இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியான 21 பேருக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு!


    எனவே, 1893-ல் புனே மற்றும் பம்பாய் பிராந்தியங்களில் ”Swaraj is my birth right and I shall have it - சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கிய சுதந்திரப் போராட்ட தளகர்த்தர்களில் ஒருவரான ’பாலகங்காதர திலகர்’  தேசப்பற்றோடு இந்தியாவின் அனைத்து கிராமங்களில் சந்து பொந்துகளிலெல்லாம் விநாயகர் சிலை வழிபாட்டையும், விநாயகர் சதுர்த்தியையும் ஒரு இயக்கமாகவே முன்னெடுத்தார். அதனால் வீடுகளில் முடங்கிக் கிடந்த மக்கள் வீதிக்கு வந்தனர். அன்று ஆங்கிலேயரை எதிர்த்து ஒன்று கூடுவதற்கும், சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், தங்களுடைய வழிபாட்டு உரிமைகளை மீட்டுக் கொள்வதற்கும் உண்டான ஒரே மார்க்கமாக இருந்தது விநாயகர் வழிபாடு மட்டுமே.

    இவ்வளவு சிறப்புகள் மிக்க விநாயகர் சதுர்த்தி விழாவை கொரோனாவை காரணம் காட்டி தடை செய்வது என்பது ஏற்புடையதல்ல. விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து வழிபட யாருடைய அனுமதியும் தேவையில்லை. பொது இடத்தில் வைத்து வழிபடவும், நீர்நிலைகளில் கரைத்திடவுமே அரசின் அனுமதி வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
    Published by:Murugesh M
    First published: