கிருஷ்ணகிரி அருகே உயிருக்கு போராடிய மூதாட்டியை 108 ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தன் கையால் சுமந்துகொண்டு வாகனத்தில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த ஊத்தங்கரை காவல் ஆய்வாளருக்கு குவியும் பாரட்டுகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியில் வசித்து வரும் 88 வயதான சரஸ்வதி என்ற மூதாட்டி அரசு வழங்கும் தன்னுடைய மாதந்திர ஓய்வூதிய பணத்தை பெறுவதற்காக ஊத்தங்கரை ஸ்டேட் பாங்கிற்கு தன்னுடைய உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வந்து பணத்தை பெற்றுக் கொண்டு மீண்டும் கல்லாவியை நோக்கி சென்று கொண்டிருந்தார் . அப்போது கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் இருசக்கர வாகனம் பள்ளத்தில் தடுமாறியதில் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த மூதாட்டி பலத்த காயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் 108க்கு போன் செய்து காத்திருந்த நிலையில் அதிக அளவு இரத்த வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் அவ்வழியாக வந்த ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் லட்சுமி, அவர்களுக்கு தகவல் அளித்தனர். இதனை பார்த்த காவல் ஆய்வாளர் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உடனடியாக மூதாட்டியை தன்னுடைய வாகனத்திலேயே ஏற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மருத்துவமனையில் யாருடைய உதவியையும் எதிர்பாராமல் உடனடியாக இறங்கி தன் வாகனத்தில் ஏற்றிச் சென்ற மூதாட்டியை தூக்கிகொண்டு போய் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார்.ஆனால் மூதாட்டிக்கு அதிக ரத்தம் வெளியேறியதால் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர் . அப்போது, ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் லட்சுமி காயமடைந்த மூதாட்டியிடம் தைரியமாக இருக்க வேண்டும் என கூறினார் . அதற்கு அந்த மூதாட்டி அவரது கையை அசைத்து நன்றியைக் கூறினார்.
இது குறித்து அந்த மூதாட்டியின் உறவினரான நவின்குமார் கூறுகையில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தனது பாட்டியை காவல் ஆய்வாளர் லட்சுமி அவர்கள் தன்னுடைய வாகனத்திலேயே ஏற்றிக்கொண்டு சென்று சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தால் தற்போது அவர் நலமுடன் உள்ளதாக தெரிவித்தார்.மேலும் தனது பாட்டிக்கு உதவி செய்த ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் லட்சுமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
இதுபோன்று உதவிகரம் நீட்டியதை பார்த்த அப்பகுதி மக்கள் ஆய்வாளர் லட்சுமி போன்று மனிதாபிமானம் கொண்ட காவலர்களை மனதார பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர்: ஆ.குமரேசன் ( கிருஷ்ணகிரி)
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.