Home /News /tamil-nadu /

மாங்காய்களை பழுக்க வைக்க இன்றும் விவசாயிகள் பின்பற்றும் இயற்கை முறைகள் என்ன?

மாங்காய்களை பழுக்க வைக்க இன்றும் விவசாயிகள் பின்பற்றும் இயற்கை முறைகள் என்ன?

 கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்

கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்

Mangoes Ripening | கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களின் ஆயுள் மிக மிகக் குறைவு. அதை சாப்பிடும் நமக்கும்தான்.

    கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்படும் நிலையில், அது இல்லாமல் மாங்காய்களை பழுக்க வைக்க முடியாது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாங்காய்களை பழுக்க வைக்க இன்றும் விவசாயிகள் பின்பற்றும் இயற்கை முறைகள் என்ன? என்பதை பார்க்கலாம்.

    முக்கனிகளில் முதல் கனியான மாம்பழம் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, கோயம்பேடு பழ வியாபாரிகள் கொடுத்த விளக்கம்தான் இது. கோடைகாலம் வந்துவிட்டாலே கூடவே வந்துவிடுவது மாம்பழ சீசன். தெருக்களில் வரும் தள்ளுவண்டி கடைகள், சாலையோரக் கடைகள், சந்தைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் என எங்கெங்கு காணினும் குவிந்திருக்கும் மாம்பழங்கள். மஞ்சள் நிறத்திலான மாம்பழங்களின் மணம் எப்போது மனதை சுண்டி இழுப்பவை.

    மரங்களில் சுரக்கும் எத்திலீன் வாயு மூலம் இயற்கையாக பழுத்து, நமக்கு கிடைக்கும் மாம்பழங்கள் எப்போதும் தனி சுவை. ஆனால், அண்மையில் சில ஆண்டுகளாக அப்படி பழுக்க விடப்படுவதில்லை மாம்பழங்கள். காய்ப் பருவத்திலேயே பறிக்கப்பட்டு, கார்பைட் கற்களில் பழுக்க வைக்கப்பட்டு வருகின்றன நம் கைகளுக்கு. விவசாயிகள் இந்த வேலையைச் செய்கிறார்களா? என்றால் இல்லை. அதிக லாபத்துக்கு ஆசைப்படும் வியாபாரிகளே இதற்கு காரணம். மாந்தோப்புகளை குத்தகைக்கு எடுக்கும் வியாபாரிகள், முதிர்ச்சி அடைவதற்கு முன்பாகவே முழுவதையும் பறித்து விடுவது அண்மை காலங்களில் அதிகம்.



    முதிர்ந்த காய் முதல் பிஞ்சு வரை அனைத்தையும் ஒன்றாக குவித்து, அவை பழுப்பதற்காக வைக்கப்படுவதே இந்த கார்பைட் கல் நஞ்சு. கார்பைட் இல்லாமல் காய்கள் பழுக்காது என வியாபாரிகள் கதை அளக்கும் இப்போதும், பல விவசாயிகள் பின்பற்றுவது இயற்கை முறையைத் தான்.



    மாங்காய்களை இயற்கை முறையில் பழுக்க வைக்க அறுவடையிலேயே கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மரத்தை உலுக்கி காய்களை உதிர வைப்பதை தவிர்த்து, முற்றிய காய்களை மட்டுமே முதலில் அறுவடை செய்ய வேண்டும். பறிக்கப்பட்ட மாங்காய்களில் பால் வடிந்த பிறகு பழைய பேப்பரை தரையில் விரித்து, பரப்பி வைத்தால் பழுத்துவிடுவது இயற்கை.



    இன்னும் சில முறைகள் கூட இருக்கின்றன இயற்கை முறையில் காய்கள் பழுக்க. அதிக அளவில் மாங்காய்கள் இருந்தால், இருட்டு அறைக்குள் புகை மூட்டம் போட்டு பழுக்க வைப்பது பழைய முறை. ஆவாரம் இலை, வேப்ப இலை என அந்தந்த பகுதிகளில் இயற்கையாக கிடைக்கும் இலைகளைக் கொண்டு மூடி பழுக்க வைப்பதும் விவசாயிகளின் பழக்கம். ஆவாரம் இலையைக் கூட பயன்படுத்தாமல், அரிசியில் போட்டு பழுக்க வைப்பார்கள் இல்லத்தரசிகள்.



    புகை மூட்டம் போடாமல் வைக்கோலை பயன்படுத்தி பழுக்க வைக்கும் முறைகளும் உண்டு. இவ்வாறு வைக்கப்படும்போது, வைக்கோலில் இருந்து வெளியாகும் வெப்பத்தால் ஒரு வாரத்தில் பழுத்துவிடுகின்றன மாங்காய்கள். இவ்வாறு இயற்கை முறையில் பழுக்க வைக்க, மரத்திலேயே மாங்காய்களை தரம் பிரிப்பது அவசியம் என்கிறார்கள் விவசாயிகள். இத்தகைய முறைகளை கையாண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை, அதிக நாட்கள் இருப்பு வைக்க முடியும்.

    இதையும் படியுங்கள் | தமிழகத்தில் அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல்... கேரளாவிற்கு கடத்த முயன்ற 8டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    ஆனால், கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களின் ஆயுள் மிக மிகக் குறைவு. அதை சாப்பிடும் நமக்கும்தான்.

    செய்தியாளர்: குமரேசன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Krishnagiri, Mango

    அடுத்த செய்தி