கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த வாஸ்துசாலா நகரை சேர்ந்தவர்கள் ஸ்ரீதேவி, சிவசங்கர் தம்பதி. இவர்கள், கடந்த பிப்ரவரி 5ம் தேதி அட்கோ காவல்நிலையத்தில் திருட்டு புகார் ஒன்றை அளித்தனர். அதில் தங்கள் வீட்டிற்கு காரில் வந்த 3 நபர்கள் ஒரு லட்சம் ரூபாய் பணம், ஐந்தரை சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்று விட்டதாக தெரிவித்திருந்தனர். புகாரின் பேரில் திருட்டு வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஒசூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது திருட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்ட மூவரும் சிக்கினர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஸ்ரீதேவி - சிவசங்கர் தம்பதி தங்களது வீட்டில் 1 கோடி ரூபாய் மதிப்புடைய இரிடியம் சொம்பு இருப்பதாக தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரிடம் கூறியுள்ளனர்.
அதனை விற்றுத் தந்தால் கமிஷன் தருவதாக தம்பதி ஆசை வார்த்தை கூறியுள்ளனர். ஆனால் பன்னீர் செல்வம் அந்த இரிடியம் சொம்பை தம்பதியிடமிருந்து திருடுவதற்கு திட்டமிட்டார். அதன்படி தனது கூட்டாளிகளான வல்லரசு, இளையபிரபு, சந்துரு ஆகியோரை அனுப்பி இரிடியம் சொம்பை திருடியுள்ளார். இதனை நகை, பணம் திருடியதாக தம்பதிகள் புகாரளித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மிகைப்படுத்தி தவறான புகாரளித்த தம்பதிகளை போலீசார் கைது செய்தனர். மேலும், பன்னீர்செல்வம், வல்லரசு, இளையபுரபு ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
திம்பம் சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும் - உயர் நீதிமன்றம் உறுதி
அவர்களிடமிருந்து சொகுசு கார், இரிடியம் எனக் கூறப்பட்ட சொம்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள சந்துருவை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இரிடியம் எனக்கூறி திரிபவர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என ஒசூர் டிஎஸ்பி சிவலிங்கம் எச்சரித்துள்ளார்.
இரிடியம் என நினைத்து சொம்பைத் திருடிச் சென்ற கும்பல் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.