விநாயகர் சதுர்த்தி: இஸ்லாமியர்கள் சார்பில் சிறப்பு பூஜை!

விநாயகர் சதுர்த்தி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக விநாயகர் கோவிலில் இஸ்லாமியர்கள் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

 • Share this:
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக விநாயகர் கோவிலில் இஸ்லாமியர்கள் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

  இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதையடுத்து சிறிய அளவிலான விநாயகர் சிலையை வாங்கி, பலரும் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர்.

  இந்நிலையில், கிருஷ்ணகிரியில் புதுப்பேட்டை மிலாடி நபி விழா குழு சார்பாக  மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடம் பொது இடங்களில் சிலை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி வளாகத்திலுள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் இஸ்லாமியர்கள் சார்பில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

  மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி தொடர்ந்து 12வது ஆண்டாக நகரமன்ற உறுப்பினர் அஸ்ஸலாம் தலைமையில் இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து கோவிலில்அன்னதானம் வழங்குவதற்காக இஸ்லாமியர்கள் சார்பில் ரூபாய் 10 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.

  மத வேறுபாடு இல்லாமல் இஸ்லாமியர்கள் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: