வில்லங்கத்தில் முடிந்த செருப்பு பிரச்னை.. பட்டப்பகலில் கடைக்காரரை ஓட ஓட விரட்டி வெட்டிய நபர்
வில்லங்கத்தில் முடிந்த செருப்பு பிரச்னை.. பட்டப்பகலில் கடைக்காரரை ஓட ஓட விரட்டி வெட்டிய நபர்
கிருஷ்ணகிரி கொலை
Shocking CCTV Visuals: கிருஷ்ணகிரியில் சாதாரண செருப்பு பிரச்சினையில் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில்செருப்பு கடை உரிமையாளரை சாலையில் ஓட ஓட விரட்டி பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அடுத்த மோகன் ராவ் காலனியைச் சேர்ந்தவர் ஃபைசு. இவர் கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகே காலணிகள் விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார். இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் ஃபைசு கடையில் 1,500 ரூபாய் மதிப்பிலான காலணி வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மீண்டும் கடைக்கு வந்த லோகேஷ் அந்த காலனியை வேண்டாமென கூறி அதற்கான தொகையை திரும்ப கேட்டதாகவும் ஆனால் கடை உரிமையாளர் பைசு வேறு காலணி மாற்றித் தருவதாகவும் பணத்தை திரும்ப தர இயலாது என்றும் கூறியுள்ளார்.
Also Read: கள்ளக்காதலனால் கொல்லப்பட்ட பெண் வனக்காவலர் - போலீசில் சரணடைந்த காவலர்
இதனால் பைசு மற்றும் லோகேஷ் இடையே ஏற்பட்ட தகராறில் லோகேஷை பைசு நண்பர்கள் தாக்கியதால், லோகேஷ் காயமடந்துள்ளார். பின்னர் காவல்துறையினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை பைசு தனது கடையை திறக்க வரும்போது திடீரென லோகேஷ் கையில் அரிவாளுடன் பைசுவை வெட்ட துரத்தியுள்ளார். அப்பொழுது லோகேஷிடம் இருந்து தப்பிப்பதற்காக பைசு சாலையில் ஓடியுள்ளார் இருப்பினும் துரத்திச் சென்ற லோகேஷ் அவரின் தோள்பட்டை கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக படுகாயம் அடைந்த பைசுவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கிருஷ்ணகிரி நகரின் பரபரப்பு நிறைந்த சாலையில் பட்டப்பகலில் ஒருவர் ஓட ஓட துரத்தி வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு லோகேஷை தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: ஆ.குமரேசன் (கிருஷ்ணகிரி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.