மே 2 வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கவேண்டும் -உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி வழக்கு

சென்னை உயர்நீதிமன்றம்

மே 2ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 • Share this:
  தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2ம் தேதி எண்ணப்பட உள்ளன. இதற்கிடையில், வாக்குப் பதிவு முடிவடைந்ததிலிருந்தே தேர்தலை ரத்து செய்யவேண்டும், வாக்குப் பதிவை நிறுத்த வேண்டும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கைவைத்துவருகிறார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

  அவர் தனது மனுவில், தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் பண பலத்தை தடுக்க இரு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர் என தேர்தல் அறிவிப்பின்போது தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்ததாகவும், இருந்த போதும் தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் சார்பில் பணபட்டுவாடா நடந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

  பல தொகுதிகளில் நடந்த பணபட்டுவாடா தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், தமிழகத்தில் மட்டும் 430 கோடி ரூபாயை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

  பணப்பட்டுவாடா தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை நியமித்து விசாரணை நடத்தக் கோரியும், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரியும் அளித்த புகாரை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: