2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் கட்சி பதவிக்காக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியிடம் ரூ. 1 கோடி கொடுத்ததாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியின் குற்றச்சாட்டிற்கு, திட்டமிட்டு தன்னை அவமதிக்கும் வகையில் இந்த ஆடியோ வெளியிட்டுள்ளதாக கே.பி.முனுசாமி பதில் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மாவட்டச் செயலாளர் பதவிக்காக எடப்பாடி பழனிச்சாமி அணியில் தற்போது உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தன்னிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டதாகவும், தன் போல் பலரிடம் கே.பி. முனுசாமி பணம் பெற்று ஏமாற்றியுள்ளார் என குற்றம் சாட்டி ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
ஆடியோவை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையின் போது ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை விட்டு வெகுதூரம் சென்று விட்டதாகவும் அதிமுகவிற்கு உண்மையாக ஒ பன்னீர்செல்வம் உழைப்பாரா என கே.பி.முனுசாமி பேசியுள்ளார். தர்மயுத்தம் போது ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருந்த கே.பி.முனுசாமி பணம் சம்பாதிக்கவே எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது மாவட்ட செயலாளர் பதவிக்காக ஒரு கோடி ரூபாய் அவர் கேட்டார். அந்த ஆடியோவை தற்போது வெளியிட்டுள்ளேன். என் போல் பலர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர் என்றார். மேலும் சீசனுக்கு எற்றார் போல் வியாபாரம் செய்யும் கே.பி.முனுசாமி வாயை மூடவில்லை என்றால் அடுத்த இரண்டு நாட்களில் வீடியோ ரிலீஸ் செய்வேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்பாக பேசினால் இனி நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என எச்சரித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்து கொண்டே எடப்பாடி பழனிச்சாமிக்கு எட்டப்பன் வேலையை கே.பி.முனுசாமி பார்த்து வந்தார். என்னைப் போல் பலர் பணம் கொடுத்து கே.பி.முனுசாமியிடம் ஏமாந்துள்ளனர். கட்சிப் பொறுப்பிற்காக அப்போது பணம் கொடுத்தது எனக்கு தப்பாக தெரியவில்லை. ஆனால் இன்று ஓ.பன்னீர்செல்வம் தொடர்பாக வரம்பு மீறி கே.பி.முனுசாமி பேசும்போது, கட்சிப் பொறுப்பு வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாய் கேட்ட ஆடியோவை வெளியிடுவதில் தவறில்லை’ என்றார்.
இந்த ஆடியோ 2021 ஆம் ஆண்டு கே.பி.முனுசாமி சட்டமன்ற பொது, தேர்தலுக்காகக்காக தன்னிடம் 1 கோடி ரூபாய் கேட்டார் அதை எங்கு வந்து வாங்க வேண்டும் தன் மகனையே அனுப்பி வாங்கியதாகவும் அதில் பேசியுள்ளார். மேலும் இந்த பணத்தை பெறும் பொழுது கே.பி.முனுசாமியின் ஓட்டுநருடன் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேசிய ஆடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையில் இந்த ஆடியோகள் அதிமுகவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆடியோ குறித்து கே.பி. முனுசாமியிடம் கேட்ட போது, 'திட்டமிட்டு தன்னை அவமதிக்கும் வகையில் இந்த ஆடியோ வெளியிட்டுள்ளதாகவும், ஓபிஎஸ்யின் தூண்டுதலின் பேரில் கிருஷ்ணமூர்த்தி இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளதாகவும் உண்மை என்னவென்று கிருஷ்ணமூர்த்திக்கே தெரியும் எனவும்’ நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு கே.பி. முனுசாமி பேட்டியளித்துள்ளார்.
செய்தியாளர் : சுபாஷ் பிரபு (சென்னை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.