மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்த கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம்!

கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம்

திமுகவின் பலம் அதிகமாக உள்ளதால், இருவரின் ராஜினாமவை தொடர்ந்து, மாநிலங்களவை காலியிடங்கள் திமுக வசம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கே.பி.முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

  அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களான கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியிலும், வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இரண்டு மன்றங்களிலும் ஒரே நேரத்திலே உறுப்பினர்களாக இருக்க முடியாது என்பதால் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  கடந்த ஐந்து ஆண்டுகளாக வைத்தியலிங்கம் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். அவருக்கு ஓராண்டு மட்டுமே மீதமிருப்பதால், அவர் எம்எல்ஏ பதவியை தேர்வு செய்யலாம் என அதிமுகவை சேர்ந்த சிலர் கருதினர்.
  கே.பி.முனுசாமி கடந்த ஆண்டு தான் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இன்னும் ஐந்து வருடங்கள் மீதமுள்ளது.

  இதனால், அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக தொடர்வார்களா அல்லது பதவியை ராஜினாமா செய்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுவார்களா என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஒருவேளை இருவரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் ஒரத்தநாடு, வேப்பனஹள்ளி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும். எம்.பி பதவியை ராஜினாமா செய்தால் அவர்களின் மீதமுள்ள பதவிக் காலத்திற்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும்.

  இந்நிலையில், வேப்பனஹள்ளி தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி.முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியலிங்கமும் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

  இதையடுத்து, தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப் படி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு பலம் அதிகமாக உள்ளதால், இருவரின் ராஜினாமவை தொடர்ந்து, மாநிலங்களவை காலியிடங்கள் திமுக வசம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: