₹ 4 லட்சம் மதிப்புள்ள விதை விதைப்பு இயந்திரம்... ₹ 32 ஆயிரம் விலையில் உருவாக்கி சாதித்த கோவில்பட்டி பொறியியல் பட்டதாரி

₹ 4 லட்சம் மதிப்புள்ள விதை விதைப்பு இயந்திரம்... ₹ 32 ஆயிரம் விலையில் உருவாக்கி சாதித்த கோவில்பட்டி பொறியியல் பட்டதாரி

விதை விதைப்பு கருவி

சந்தையில் தற்போது ₹ 4 லட்சம் மதிப்புள்ள விதை விதைப்பு இயந்திரத்தை 32 ஆயிரம் ரூபாய்க்கு உருவாக்கி சாதித்துள்ளார் கோவில்பட்டி பொறியியல் பட்டதாரி

  • News18
  • Last Updated :
  • Share this:
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில் என்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஒரு திரைப்படத்தில் பாடுவார். விவசாயிகளை மனதில் வைத்து அவர் அன்று பாடியது பாடலாக இருந்தாலும், அது தான் உண்மை நிலை என்று உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இன்றைய நவீன உலகத்தில் விவசாயத்தினை நாம் மறந்தாலும், நமக்கு உணவு அளித்து வருவது விவசாயிகள் தான் என்றால் மிகையாகது. விவசாயத்தில் போதிய லாபம் இல்லை, போதிய ஆள்கள் இல்லை என்ற குறைகள் ஒரு புறம் இருந்தாலும், நவீன காலத்தில் நவீன இயந்திரங்களுடன் விவசாயத்தினை மேற்கொள்ள புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் 4 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகும் விதை விதைப்பு இயந்திரத்தினை வெறும் 32 ஆயிரம் ரூபாய்க்கு விவசாயிகளுக்கு கொடுக்கும் வகையில் இயந்திரத்தினை உருவாக்கி அசத்தியுள்ளார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரியில் கடந்த 2019ம் ஆண்டு இயந்திரப் பொறியியல் துறையில் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் மாணவர் ராஜ் குமார், மிக குறைந்த விலையில் விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் விதை விதைப்பு இயந்திரம் தயாரிப்பு செய்வதற்கான வடிமைப்பினை உருவாக்கினார். இதையெடுத்து கே.ஆர். கண்டுபிடிப்பு மையம் மற்றும் நேஷனல் பொறியியல் கல்லூரி வணிக கருவகம் ஆகியவற்றின் உதவியுடன், முன்னாள் மாணவர் ராஜ்குமார் விதை விதைப்பு இயந்திரத்தினை உருவாக்கியுள்ளார். இந்த இயந்திரத்தினை டிராக்டர் கலப்பையுடன் இணைத்து விதை மற்றும் உரத்தினை சேர்ந்து நடவு பணிகள் மேற்கொள்ள முடியும். ஒரு நாளில் சுமார் 20 ஏக்கர் விதை விதைக்கும் வகையில் விதை விதைப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

ராஜ் குமார்


பருத்தி, உளுந்து, சூரியகாந்தி, பாசி என எல்லா விதைகளையும் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள விதை விதைப்பு இயந்திரம் மூலமாக விதைக்கும் படி வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. 9 இன்ச் 15 இன்ச் வரை 6 விதமான இடைவெளியில் விதையை விதைக்கும் வகையில் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

இயந்திரத்தினை வடிவமைத்த முன்னாள் மாணவர் ராஜ் குமார் கூறுகையில் தன்னுடைய குடும்பம் விவசாய குடும்பம் என்றும், விவசாய பணிகளுக்கு போதிய ஆள்கள் கிடைக்கமால் இருந்தது என்றும், இதனை போக்கும் வகையில் இயந்திரங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதில் உருவானது தான் விதை விதைப்பு இயந்திரம் என்றும், இதனை பயன்படுத்தி டிராக்டர் மூலம் ஒருவர் மட்டுமே ஒரு நாளைக்கு 20 ஏக்கர் விதைக்கலாம் என்றும், இதனை பயன்படுத்தி விதைகள் விதைத்தால், தற்பொழுது கிடைக்கும் மகசூலை விட அதிக மகசூல் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

விதை விதைக்கும் கருவி


உதரணமாக தான் கண்டுபிடித்துள்ள இயந்திரம் மூலமாக ஒரு ஏக்கருக்கு 34 ஆயிரம் முதல் 37 ஆயிரம் வரையிலான மக்காச்சோள விதைகள் நட முடியும் என்றும், இதன் மூலமாக 25 குவிண்டால் முதல் 30 குவிண்டால் வரை மகசூல் பெற முடியும் என்றும், இதே விதைப்பு இயந்திரங்களை வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் ₹ 4 லட்சம் வரை விற்பனை செய்து வருவதாகவும், இதனை சிறு, குறு விவசாயிகள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும், ஆனால் தான் தயாரித்துள்ள இயந்திரத்தினை விலை வெறும் 32 ஆயிரம் ரூபாய் என்பதால் அனைத்து விவசாயிகளும் எளிதில் வாங்கி பயன்படுத்த முடியும் என்றும், விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் நேஷனல் பொறியியல் கல்லூரி உதவியுடன் தற்பொழுது 25 இயந்திரங்களை தயாரித்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.இந்த இயந்திரத்தினை வாங்கிய விவசாயி ஞானபிரகாசம் என்பவர் கூறுகையில் டிராக்டர் வைத்து விதை விதைக்கும் போது 3 நபர்கள் தேவைப்படுவர்கள் என்றும், ராஜ் குமார் கண்டுபிடித்துள்ள இயந்திரத்தினை பயன்படுத்தினால், டிராக்டர் டிரைவர் மட்டும் போதும் விதையை எளிதில் விதைத்து விடாலம் என்றும், இதனால் ஆள்பற்றாக்குறை என்ற பேச்சுக்கு இடமில்லமால் போய்விடுவது மட்டுமின்றி, பணம் மிச்சமாகிறது என்றும், இந்த இயந்திரம் விவசாயத்திற்கு நல்ல பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

விவசாய பணிகளுக்கு இளம் தலைமுறையினர் கண்டுபிடிப்புகள் என்றைக்கு விவசாயம் இருக்கும் என்று உணர்த்தும் வகையில் உள்ளது. புதிய புதிய கண்டுபிடிப்புகள் வருவதும் மட்டுமின்றி விவசாயிகளின் வாழ்வில் புதிய வெளிச்சம் பிறக்கட்டும் என்பது அனைவரின் வேண்டுதாலும், விருப்பமும் அது தான்.
Published by:Sankar
First published: