கோவில்பட்டி அருகே 10 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர், சாலை வசதி இல்லாமல் அல்லல்படும் குடும்பங்கள்

கோவில்பட்டி அருகே 10 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர், சாலை வசதி இல்லாமல் அல்லல்படும் குடும்பங்கள்

விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் மாணவி

நீதிமன்றத்தில் உள்ள வழக்கு காரணமாக 10 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர், சாலை என அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படுகிறது கோவில்பட்டி அருகே உள்ள இந்த கிராமம்...

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அயன்விருசம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ளது மாமுநயினார்புரம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊரின் மயானத்திற்கு செல்லும் சாலையில் 10க்கு மேற்ப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி ஊரில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த பகுதிக்கு இதுவரை சரியான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி என எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படமால் உள்ளது. சரியான சாலை வசதி இல்லாத காரணத்தினால் மழைக்காலங்களில் அங்குள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி மிகுந்த சிரமத்திற்கு இடையில் தான் அப்பகுதி மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் குடிநீர் எடுப்பதற்கு கிராமத்தின் முகப்பு பகுதி வரை சென்று தான் எடுக்க வேண்டி உள்ளது. மழைக்காலங்களில் அதுவும் எடுக்க முடியாத சூழ்நிலையில் தவித்து வருகின்றனர்.

ரசீதுடன் கிராம மக்கள்


இவற்றையெல்லாம் விட கொடுமையான விஷயமாக உள்ளது மின்சார வசதி இல்லாததுதான். 10 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் இருளில் வாழ்ந்து வருகின்றனர் இப்பகுதி மக்கள். மின்சார வசதி இல்லாத காரணத்தினால் இங்கு வசிக்க கூடிய மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மண்ணெணெய் விளக்கு, டார்ச்லைட் ஆகியவற்றின் மூலமாக தான் இரவு நேரங்களில் தங்களது அன்றாட பணிகளை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சமையல் செய்வது, குழந்தைகள் படிப்பு ஆகியவை மண்ணெணெய் விளக்கில் தான் நடைபெறுகிறது. சுற்றிலும் காட்டு பகுதி என்பதால் இரவு நேரங்களில் விஷ பூச்சிகளின் தொல்லை இருப்பதாக கூறுகின்றனர்.

மின்வசதி இல்லாத காரணத்தினால் அரசு கொடுத்த டிவி, பேன், மிக்சி, கிரைண்டர்கள் ஆகியவைற்றை மூலையில் போட்டு வைத்துள்ளனர். மின்சாரம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் வயரிங் செய்து காத்து இருக்கின்றனர். வீடுகள் கட்டி முறைப்படி ஊராட்சி மன்றத்திற்கு வீட்டு வரி செலுத்தி வரும் தங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தர மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இந்த குடியிருப்பு வரக்கூடிய மாயனசாலை தொடர்பாக தனிநபர் ஒருவருக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் பிரச்சினை எழுந்து, அது தொடர்பாக நீதிமன்றம் வரை வழக்கு சென்றது தான் காரணம் என்கின்றனர். இதனால் தான் இப்பகுதிக்கு சாலை, குடிநீர், மின்சார வசதிகள் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

எந்த வசதிகளும் இல்லாமல் தவித்து வருகிறோம், ஆயிரம் தடவை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை, தொடர் போராட்டம் காரணமாக மின்சாரத்துறை 2 மின்கம்பங்களை மட்டும் வைத்து விட்டு சென்று விட்டதாகவும், மின்வசதி தரவில்லை என்றும், இதனால் மண்ணெணெய் விளக்கு, டார்ச்லைட் வைத்து தான் இரவு பொழுதினை கழித்து வருவதாகவும், அரசு வழங்கும் மண்ணெணெய் போதவில்லை என்றும், டார்ச்லைட், மெழுகுவர்த்தி வாங்க மாதம் 2 ஆயிரம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும், சமையல் செய்வது, குழந்தைகள் படிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதிகாரிகளிடம் கேட்டால் வழக்கு இருக்கு மட்டும் சொல்றங்க தவிர செய்வதற்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை, வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகள் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில்லை என்கிறார் வேதனையுடன் பெண் அமுதா.அதிகம் பணம் செலவு செய்து வீடுகட்டியும் மின் இணைப்பு இல்லை என்றும், மின்வசதிக்காக வீட்டில் அனைத்து ஏற்பாடுகளை செய்தும், மின்சார வாரியத்தில் பணம் கட்டிய பின்னரும் மின் இணைப்பு தரவில்லை என்றும், மின்சாரம் இல்லாத காரணத்தினால் தங்கள் வீடுகளில் பெண் எடுக்கவோ, பெண் கொடுக்கவோ மற்றவர்கள் தயக்கம் காட்டுவதினால் தங்கள் பகுதி இளைஞர்கள், பெண்களுக்கு திருமணம் நடைபெறுவது தடை பெறுவதாகவும், இரவில் விஷ பூச்சிகள் தொல்லை இருப்பதாகவும், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளவதை தவிர வேறு வழியில்லை என்கிறார் ஆதங்கத்துடன் பொன் முனியம்மாள்

இது தொடர்பாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் கேட்ட போது பாதை பிரச்சினை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்த காரணத்தினால் எவ்வித வசதியையும் செய்ய முடியவில்லை என்றும், தற்பொழுது தான் புதிய ஊராட்சி நிர்வாகம் பதவி ஏற்றுள்ளதாகவம், அப்பகுதி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்ய முயற்சி செய்து வருவதாகவும், குறிப்பாக மின்வசதி விரைவில் செய்து தருவதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக கூறுகின்றனர்.

மின்சார வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, மின்கம்பங்கள் கொண்டு செல்லும் பகுதி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்த காரணத்தினால் தான் எவ்வித பணிகளையும் செய்யமுடியிவில்லை என்றும், ஊராட்சி மன்ற நிர்வாகம் ஒத்துழைப்பு கொடுத்தால் தாங்கள் செய்ய தயராக இருப்பதாக கூறுகின்றனர்

10 ஆண்டுகளாக எவ்வித வசதிகளும் இல்லாமல் தனித்துவிடப்பட்ட பகுதியாக இருக்கும் இப்பகுதி மக்களுக்கு அனைத்து வசதிகளையும் குறிப்பாக மின்வசதி செய்து கொடுத்து, இருளில் தவித்து வரும் மக்களுக்கும், மக்களின் வாழ்வியலுக்கும் அரசு வெளிச்சம் தர வேண்டும் என்று என்பது தான் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Published by:Sankar
First published: