கோவில்பட்டி : பொதுமக்கள் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் - நிர்வாகிகள் விரட்டியடிப்பு

கோவில்பட்டி : பொதுமக்கள் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் - நிர்வாகிகள் விரட்டியடிப்பு

கோவில்பட்டி அதிமுகவினர் வாக்குவாதம்

அதிமுக நிர்வாகிகள் பொதுமக்களை வாக்களிக்க வலியுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளை சேர்ந்த பெரும்பாலான மக்கள் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து துறைகளையும் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அய்யனேரி, பழைய அப்பனேரி, இளையரசனேந்தல் உள்ளிட்ட 12 ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கட்சி நிர்வாகிகள் மட்டுமே தங்கள் வாக்குகளை அளித்துள்ளனர். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 10 முதல் 12 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. இந்நிலையில் பழைய அப்பனேரி கிராமத்தில் குருவிகுளம் அதிமுக ஒன்றியச் செயலாளர் வாசுதேவன் தலைமையிலான அதிமுகவினர் அப்பகுதி மக்களை வாக்களிக்க வலியுறுத்தியதால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் அரசியல் கட்சியினரை வாக்குச்சாவடி அருகே ஏன் காவல்துறை அனுமதித்தனர் என்று மக்கள் கேள்வி எழுப்பி வாக்குவாத்தில் ஈடுபட்டனர். மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் காரில் கிளம்பி சென்றனர். செய்தியாளரை கூட படம் எடுக்க அனுமதிக்காத காவல்துறையினர் அதிமுக நிர்வாகிகள் மட்டும் அனுமதித்தது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

மக்களின் கோரிக்கைகளை கேட்க வந்த திமுக வேட்பாளர் ராஜாவிடம் பொதுமக்கள் பேச மறுத்தது மட்டுமின்றி அரசியல்வாதிகள் யாரும் வரக்கூடாது என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published by:Sheik Hanifah
First published: