கோவில்பட்டி நகராட்சியில் திடீரென 10 மடங்கு அதிகரித்த குப்பை வரி - பொது மக்கள் அதிர்ச்சி

கோவில்பட்டி நகராட்சியில் திடீரென 10 மடங்கு அதிகரித்த குப்பை வரி - பொது மக்கள் அதிர்ச்சி

குப்பையை சேகரிக்கும் நகராட்சி பணியாளர்

கோவில்பட்டி நகராட்சியில் திடீரென 10 மடங்கு குப்பை வரி அதிகரிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகம் முழுவதும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் குப்பை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. வீடுகள் மற்றும் வணிக நிறுவன கட்டிடங்களுக்கு விதிக்கப்படும் வரிக்கு ஏற்ப, குப்பை வரி கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

உதராணமாக ஒரு வீட்டிற்கு ரூ500 வரி என்றால் குப்பை வரி ரூ.10ம், 501 முதல் 1000 வரையில் உள்ள வரி விதிப்புகளுக்கு ரூ20 குப்பை வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதன் படியே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு குப்பை வரி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், 2020-2021ம் ஆண்டுக்கு குப்பை வரி 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது கண்டு பொது மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

2020 -21-ம் ஆண்டுக்கான முதல் அரையாண்டு வீட்டு சொத்து வரி மற்றும் குப்பை வரி செலுத்த சென்ற பொது மக்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக வீடு மற்றும் வணிக கட்டிடத்திற்கான  சொத்து வரி வசூல் செய்த நகராட்சி நிர்வாகம் குப்பைவரி மட்டும் 10 மடங்கு உயர்த்தி வசூல் செய்யப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உதாரணமாக கடந்த ஆண்டு ஒரு வீட்டிற்கு மாதம் 10 ரூபாய்; வசூலிக்கப்பட்டு வந்த குப்பை வரி 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் 6 மாதத்திற்கு 60 ரூபாய் குப்பை வரி செலுத்திய மக்கள் தற்பொழுது 600 ரூபாய் குப்பை வரியை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ரசீது


இதில் பாதிக்கப்பட்ட சேதுரத்தினம் என்பவர் கூறுகையில், தனக்கு சொந்தமான கடைக்கு கடந்த ஆண்டு வரை மாதம் 10 ரூபாய் என 6 மாதத்திற்கு 60 ரூபாய் குப்பை வரி செலுத்தி வந்தேன். ஆனால் இந்தாண்டுக்கான வரி செலுத்த சென்ற போது குப்பை வரி 10 மடங்கு உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டதாகவும், எவ்வித முன் அறிவிப்பு இல்லமால் குப்பை வரி வசூலிக்கப்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் சரியான பதில் தரவில்லை என்றும், கடைக்கான சொத்து வரி 246 ரூபாய் ஆனால் குப்பை வரி 600 ரூபாய் இது எந்த அடிப்படையில் வசூல் செய்தார்கள் என்று தெரியவில்லை, கொரோனா காலத்தினை பயன்படுத்தி உயர்த்தப்பட்டதா என்று தெரியவில்லை, இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

இது குறித்து நகராட்சி ஆணையர் ராஜாராமிடம் கேட்ட போது குப்பை வரி எதுவும் உயர்த்தப்படவில்லை என்றும், குப்பை வரி நகராட்சி சுகாதார பிரிவு சார்பாக நிர்ணயம் செய்யப்படுவதாகவும், இந்த வரிகள் எல்லாம் ஆன்லைன் மூலமாக வசூல் செய்யப்படுகிறது. இது சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது. இதில் சாப்ட்வேரில் பிரச்சினை காரணமாக குப்பை வரி உயர்த்தப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், கோவில்பட்டி நகரில் 110 பேருக்கு இது போன்று பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சரி செய்யப்பட்ட பின் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை, பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த வரும் காலங்களில் செலுத்தும் வரிகளில் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.

தமிழகம் முழுவதும் ஒரே ஆன்லைனில் குப்பை வரி வசூல் செய்யப்படும் போது கோவில்பட்டி நகராட்சியில் மட்டும் எப்படி கூடுதலாக வசூல் செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பும் பொதுமக்கள், குப்பை வரி தொடர்பாக நகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும், சாப்ட்வேரை சரி செய்த பின்னர் குப்பை வரி வசூல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Published by:Sankar A
First published: