'எங்கு முறையிட்டும் பலன் இல்லை'.. மன வேதனையில் இரு கால்களை இழந்த மாற்றுத்திறனாளி.. அரசு உதவிக்காக கோரிக்கை

விஜய்

கோவில்பட்டி அருகே இரு கால்களையும் இழந்த இளைஞர், குடும்பம் வறுமையில் வாடுவதால் அரசு போதிய உதவிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கீழ ஈரால் பழைய ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர்கள் அந்தோணிராஜ், இலங்கைஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள். மகளுக்கு திருமணமாகிவிட்டது. இந்த தம்பதியின் மூத்த மகன் விஜய். 12-ஆம் வகுப்பு வரை படித்த விஜய் குடும்ப சூழ்நிலையை கருதி லாரி கிளீனராக பணியாற்றி வந்தார். இவரது வருமானத்தின் மூலமாக அவரது குடும்பத்தினர் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென விஜய்க்கு இரு கால்களும் இயங்காமல் பாதிக்கப்பட்டுள்ளது.

  இதனை தொடர்ந்து விஜய் குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அதிக செலவு செய்து சிகிச்சை அளித்தனர். கடன் வாங்கி செலவு செய்து எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தினாலும், மேலும் கடன் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாலும், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளனர். மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

  விஜயை பாரிசோதனை செய்த மருத்துவர்கள் இருகால் பகுதிகளும் இரத்தம் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டு, கால்கள் அழுகி போய் உள்ளதாகவும், கால்களை எடுப்பதனை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளனர்.  கால்கள் போனால் பரவாக இல்லை, மகன் உயிரோடு இருந்தால் போதும் என்று எண்ணிய பெற்றோர் அதற்கு சம்மதிக்க விஜய்க்கு இருகால்களும் அகற்றப்பட்டன. எப்பொழுதும் சுறுசுறுப்பாக வேலைக்கு சென்று குடும்பத்தினை காப்பாற்றி வந்த விஜய் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் முடங்கி போய் உள்ளார்.

  கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை குழுவினர் விஜயை பரிசோதனை செய்து 90 சதவீதம் பாதிப்பு இருப்பதாக கூறி அரசு மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கினர். இந்த அட்டையை பெற்ற பின்னர் மாற்றுத்திறனாளி உதவி தொகை பெறுவதற்கு விஜய் விண்ணப்பம் செய்துள்ளார்.

  ஆனால் தற்பொழுது வரை உதவி தொகை வரவில்லை. 3 சக்கர சைக்கிள் மற்றும் கொரோனா நிவாரண உதவி தொகையாக ரூ 1000 வழங்கப்பட்டுள்ளது.  ஏழ்மையான குடும்பம், இருக்கும் ஓட்டு வீட்டினை கூட பராமரிக்க முடியாத நிலையில் விஜய் குடும்பம் பரிதவித்து வருகிறது. விஜய் தந்தை அந்தோணி ராஜ் ஒரு மாற்றுதிறனாளி, இலங்கைஸ்வரி உடல் நிலை பாதிக்கப்பட்டவர் இருவரும் தேசிய ஊராக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர்.

  மேலும் விஜய் சகோதரர் வெங்கடேஷ் கூலி வேலைக்கு செல்கிறார். இதில் கிடைக்கும் வருவாய் பெரும்பாலும் விஜய்யின் மருத்துவ செலவுக்கு செல்லும் சூழ்நிலை இருப்பதால் அக்குடும்பத்தினர் மிகவும் துயரப்பட்டு வருகின்றனர்.  மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகை, மூன்றுசக்கர ஸ்கூட்டர், கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கினால் தனது குடும்பம் ஏழ்மையில் இருந்து மீள்வது மட்டுமின்றி, தனக்கு வாழ்வில் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும் என்று கூறும் விஜய், மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர் தனி பிரிவு ஆகியற்றைக்கு பலமுறை மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை, மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை வழங்கி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் இது வரை உதவி தொகை கூட வழங்க நடவடிக்கை இல்லை என மன வேதனையுடன் கூறுகின்றார் விஜய்.  தங்களது குடும்பத்தினை காப்பாற்றி வந்த தங்களது மகன் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி போய் உள்ளதாகவும், வட்டிக்கு வாங்கி மருத்துவ செலவு பார்த்தும் முடியவில்லை என்றும், தற்பொழுதும் கிடைக்கும் பணம் அனைத்தும் மருத்துவ செலவிற்கே செலவழித்து வருவதாகவும், தங்களுக்கு பின்னர் தங்களின் மகனின் நிலையை என்னவாகும் என்ற கவலை உள்ளதாகவும், அரசு உதவி செய்தால் மட்டுமே தங்களால் இந்த துயரத்தில் இருந்து மீள முடியும் என்கின்றனர் விஜய் பெற்றோர்.

  பல கனவுகளுடன் இருந்த இளைஞனின் வாழ்வு முடங்கிய நிலையில் அரசு உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞருக்கு அரசு உதவ வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: