பொன் ஏர் பூட்டும் திருவிழா- மண் மணம் மாறாமல் கொண்டாடிய கோவில்பட்டி விவசாயிகள்

பொன் ஏர் பூட்டும் திருவிழா- மண் மணம் மாறாமல் கொண்டாடிய கோவில்பட்டி விவசாயிகள்

கோவில்பட்டி விவசாயிகள்

கோவில்பட்டி பகுதியில் பொன்ஏர் பூட்டும் திருவிழாவை விவசாயிகள் மகிழ்வுடன் கொண்டாடினர்.

  • Share this:
பாரம்பரிய விதைகளை பாதுகாக்க வலியுறுத்தும் பொன் ஏர் பூட்டும் திருவிழாவை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வழக்கமான உற்சாகத்துடன் விவசாயிகள் கொணடாடடினர். பொன் ஏர் பூட்டி உழவு செய்து வீட்டிற்கு திரும்பும் விவசாயிகள் மீது இல்லத்தரசிகள் மஞ்சள் நீர் ஊற்றி வரவேற்றனர்.

தமிழர்களின் பண்பாடு இன்னும் கிராமப்பகுதிகளில் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் கிராம விவசாயிகள் ஒன்று கூடி ஒற்றுமையாக, பொன் ஏர் பிடித்து விவசாய நிலங்களை உழுது கொண்டாடி வருகின்றனர். சித்திர மேழி வைபவம் தமிழில் பொன் ஏர் பூட்டும் திருவிழா என்று அழைக்கப்படும். சிலப்பதிகாரத்தில் இந்த திருவிழா பற்றி ஏர்மங்கலம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.

விவசாயிகள்


பொன்ஏர் என்றும் மதிஏர் என்று அழைப்பார்கள். தங்கத்தால் செய்யப்பட்ட ஏர் கலப்பை கொண்டு வருடத்தின் முதல்நாளில் அரசன் உழவை தொடங்கிவைப்பான். இவ்வாறு அரசன் செய்வதிலிருந்து நாட்டு மக்களுக்கு அவன் தெரிவிப்பது முதலில் உழவன்தான் என்றும் அதேபிறகே அரசன் என்பதை பறைசாட்டுவதே ஆகும்.

பொன் ஏர் பூட்டும் திருவிழாவில் விவசாயிகள்


தமிழ்ப் புத்தாண்டு தினமான சித்திரை முதல் தேதியில் விவசாயத்தை துவக்கினால் அந்த ஆண்டு முழுவதும் விவசாயம் செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு அன்று விவசாயிகள் பொன் ஏர் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பொன் ஏர் என்பது விவசாயம் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் கருவிகள், காளை மாடுகளுக்கு மரியாதை செய்வது மட்டுமின்றி, இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம் பாரம்பரிய விதைகளை பாதுகாப்பதும் ஆகும். பாரம்பரிய விதைகளின் முளைப்பு திறன் குறித்தும் விவசாயிகள் அறிந்து கொள்கின்றனர்.

பாரம்பரிய விதைகள்


அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாகலாபுரம் புதுப்பட்டி கிராமத்தில் வழக்கமான உற்சாகத்துடன் பொன் ஏர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் ஒன்று திரண்டனர். நிலத்தை உழுவதற்கு தேவையான ஏர் கலப்பைகளை சுத்தம் செய்தனர். பின் காளைகளுக்கும், ஏருக்கும் அலங்காரங்கள் செய்தனர். தொடர்ந்து சூலம் பார்த்து திசையை தேர்வு செய்து அந்த திசையில் உள்ள ஒரு விவசாயின் நிலத்தை தேர்வு செய்தனர். அங்கு காளைகள் பூட்டி, ஏர் கொண்டு உழவு செய்தனர். தற்போது காளைகள் அரிதாகி வருவதால், உழவுக்கு பயன்படுத்தும் டிராக்டர்களை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க செய்தனர்.

கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், மனமாச்சர்யமின்றி ஒற்றுமையுடன் இந்த உழவுப்பணியை முடித்தனர். பின் நவதானியங்களை இந்த நிலத்தில் விதைத்தனர். பொன் ஏர் திருவிழா முடிந்து வீடு திரும்பும் விவசாயிகள் மீது, கிராமத்து பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வரவேற்றனர். களைத்துப்போய் வீடு திரும்பிய விவசாயிகளுக்கு பானக்கரம், மோர் போன்ற நீராகாரங்களை வழங்கி மகிழ்ந்தனர். மண் மனம் மாறாத இந்த பொன் ஏர் திருவிழா காலங்காலமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விவசாயி பொன்ராஜ் கூறுகையில் பொன் ஏர் திருவிழா, காலங்காலமாக நடந்து வருகிறது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் விவசாயத்தை துவங்கினால் அந்த ஆண்டு முழுவதும் நிலம் செழித்து, பயிர் விளைச்சல் இருக்கும், என்ற நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கை இன்றும் கிராமங்களில் தொடர்ந்து வருகிறது, அந்த காலங்களில் காளைகளை ஏர்பூட்டி உழவு செய்வோம். தற்போது டிராக்டர்கள் பயன்பாட்டில் உள்ளதால், அதனை கொண்டு உழவு செய்கிறோம். வீட்டில் சேமித்து வைத்து இருக்கும் நவதானியங்களை விதைக்கிறோம், இதில் இந்த விதைகளின் முளைக்கும் திறனை கண்டறிந்து, விவசாயம் செய்யும் போது தரமான விதைகளை விதைக்கிறோம் என்கின்றனர்.

சித்திரை முதல் நாள் ஆண்கள் நிலத்திற்கு சென்று உழுதுவிட்டு வீட்டிற்கு வருவார்கள். பெண்கள் அவர்கள் மீது மஞ்சள் உற்றி மங்களரமாக இருக்க வேண்டும் என்று வரவேற்போம். விவசாய நிலத்திற்கொண்டு சென்ற விதைத்த விதைகளில் எந்த விதை நன்றாக முளைத்து இருக்கிறதோ, அதனை எடுத்து வைத்து தங்களது நிலத்தில் விதைத்து விவசாயம் செய்வோம். எவ்வித வேறுபாடு இல்லமால் அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து பொன் ஏர் பூட்டும் விழாவினை ஆண்டுதோறும் கொண்டாடடி வருவதாக கூறுகிறார் புதுபட்டியை சேர்ந்த ராமலெட்சுமி.

விவசாய நிலம் பொன் விளையும் பூமி என்பதால் பொன் ஏர் பூட்டும் நிகழச்சி நடைபெற்று வருவதாகவும், கொரோனா காரணமாக கடந்த ஆண்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இன்று நிலத்தில் பூஜை செய்து விவசாய பணிகளை தொடங்கியுள்ளதாகவும், இந்தாண்டு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக அமைய இறைவனை வேண்டியுள்ளதாக கூறுகிறார் கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றரெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார்

ன்ற குறள் மூலம் உழவனை தொழுதுதான் மற்றவர்கள் உண்ண வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். அது போன்று விவசாயிகள் தங்களது நிலத்தினை வணங்கும் நாளாக சித்திரை முதல் நாளை கடைபிடித்து வருகின்றனர். விவசாயம் செழித்து இருக்கும் வரை விவசாயிகள் மட்டுமின்றி தமிழர்களின் பண்பாடு என்றும் அழியமால் இருக்கும்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: