ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அமைச்சர்கள் கொடுத்த காசோலை... பணம் இல்லை என வங்கி அதிகாரிகள் கைவிரிப்பு.. ஒரு மாதமாக காத்திருக்கும் மகளிர் குழு

அமைச்சர்கள் கொடுத்த காசோலை... பணம் இல்லை என வங்கி அதிகாரிகள் கைவிரிப்பு.. ஒரு மாதமாக காத்திருக்கும் மகளிர் குழு

கடன் வாங்குவதற்காக பல மாதங்கள் காத்திருந்து, கடும் அலைச்சலுக்கு பின்னரே கடன் பெறுவதற்கான காசோலையை அமைச்சர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்த 6 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 60 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடன் பெற கடந்த மாதம் 21ந்தேதி அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு காசோலை வழங்கிய நிலையில் மத்திய கூட்டுறவு வங்கியில் பணம் இல்லை என்று கூறியதால் ஒரு மாத காலமாக காசோலையை வைத்துக் கொண்டு மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் காத்திருக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது இளம்புவனம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 6 மகளிர் சுய உதவி குழுக்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சார்பில் கூட்டுறவு வங்கி பெருங் கடனுக்காக விண்ணப்பம் செய்து இருந்தனர்.‌ இவர்களுடைய இந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு கடந்த மாதம் 21ஆம் தேதி கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ ஆகியோர் ஆறு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் 60 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

தங்களுக்கு கடன் கிடைத்த மகிழ்ச்சியில் மகளிர் குழுவினர் இளம்புவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று அமைச்சர்கள் கொடுத்த காசோலையை கொடுத்தபோது எட்டயபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிக்கு சென்று பணம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.‌ அங்கு சென்றபோது ஆதார். பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை முதலில் கேட்டுள்ளனர். இதையடுத்து மகளிர் சுயஉதவிக் குழுவினர் கேட்ட ஆவணங்களை கொண்டு கொடுத்தபோது , ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனியாக கணக்கு தொடங்க வலியுறுத்தியுள்ளனர். அதனையும் மகளிர் குழுவினர் செய்துள்ளனர். ஆனால் அதன் பின்னர் தற்போது பணம் இல்லை என்று கூறுவதாகவும், எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தங்களை வங்கியில் இருந்து வெளியே அனுப்பி விடுவதாக கடன் பெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒரு மாத காலமாக தினம்தோறும் காசோலை வைத்துக்கொண்டு வங்கிக்குச் சென்று வருவதாகவும், ஆனால் அலுவலர்கள் சரியான பதில் அளிப்பதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிப்பு செய்துள்ளார். இதனைக் கேட்ட இளம்புவனம் மகளிர் சுயஉதவிக் குழுவினர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். பணம் கொடுக்காமல் தங்களை இழுத்தடித்தது மட்டுமின்றி, தற்போது அரசின் தள்ளுபடி சலுகையும் பெறமுடியாமல் அதிகாரிகள் செய்துள்ளதாக வேதனையுடன் கூறுகின்றனர்.

கடன் வாங்குவதற்காக பல மாதங்கள் காத்திருந்து, கடும் அலைச்சலுக்கு பின்னரே கடன் பெறுவதற்கான காசோலையை அமைச்சர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. ஆனால் அந்தக் காசோலையை ஒரு மாதமாக வைத்துக்கொண்டு பணம் பெற முடியாமல் தவித்து வருகிறோம். பணம் இல்லை என்ற ஒரு தகவலை தவிர வேறு எவ்வித பதிலையும் கூறவில்லை. அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் இந்த காசோலைக்கு பணம் இல்லை என்றால் அரசு எப்படி இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இனியாவது விரைந்து நடவடிக்கை எடுத்து தங்களுக்கு கடனாக வழங்கப்பட்ட தொகையை வழங்குவது மட்டுமின்றி, அரசு அறிவித்துள்ள தள்ளுபடி சலுகையும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்பது மகளிர் சுய உதவிக் குழு பெண்களின் கோரிக்கையாக உள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது நான் வெளியில் இருக்கிறேன் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்யிடம் இது தொடர்பாக கேட்டபோது இந்த பிரச்சனை தனது கவனத்திற்கு வரவில்லை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிடம் இது பற்றி விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க கூறுவதாகத் தெரிவித்தார்

First published:

Tags: ADMK