சென்னை: காதல் தோல்வி.. கஞ்சா.. கோலம்போடாத வீட்டின்மீது குறி.. சைக்கோ திருடன் சிக்கியது எப்படி?

மதுரவாயலில் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்த திருடனை அயர்லாந்தில் இருந்து கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார் வீட்டு உரிமையாளர். கொள்ளையடிக்கும் போதெல்லாம் எதுவுமே அனுபவிக்க முடியாமல் போலீசாரிடம் சிக்கி விடுவதாக கொள்ளையன் புலம்பியுள்ளார், நடந்தது என்ன?

  • Share this:
நகரம் திரைப்படத்தில், திருடனாக வரும் நடிகர் வடிவேலு தனது கூட்டாளிகளால் 100-வது திருட்டின் சம்பவம் நடப்பதற்கு முன்பே, போலீசாரிடம் சிக்கிக் கொள்வார். அதைப்போல, ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக மதுரவாயலில் ஒரு திருடன் போலீசாரிடம் சிக்கியுள்ளார். வீட்டு வாசலில் கோலம் போடவில்லையா? எனப் பார்த்து கோலம் போடாத வீடுகளில் ஆளிருக்க மாட்டார்கள் என்ற சிம்பிள்  லாஜிக்கை வைத்து திருட முயன்ற சைக்கோ முரளி போலீசாரிடம் சிக்கியுள்ளார். மதுரவாயல் திருட்டு அயர்லாந்தில் தெரிந்தது எப்படி?

சென்னை மதுரவாயல் அடுத்த செட்டியார் அகரம் மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் 67 வயதான மூதாட்டி சண்முகசுந்தரவள்ளி. ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் அருள்மோகன் அயர்லாந்து நாட்டில் குடும்பத்துடன் தங்கிப் பணியாற்றி வருகிறார். திங்கட்கிழமை அன்று அண்ணாநகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு மூதாட்டி சென்று விட்டார்.

தகவல் அறிந்த அயர்லாந்தில் உள்ள மகன் அருள்மோகன், பாதுகாப்பு கருதி, அயர்லாந்து நேரப்படி திங்கள் இரவு 11 மணியளவில் தனது செல்போன் மூலம் வீட்டின் சிசிடிவியைக் கண்காணித்துள்ளார். அப்போது இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.20 மணியளவில், ஒரு திருடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றது தெரியவந்தது.


அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருள்மோகன் உடனடியாகத் தனது தாய் மூலம் மதுரவாயல் போலீசாரைத் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அடுத்த 20 நிமிடங்களில் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது லேப்டாப்பைத் திருடி தப்புவதற்கான ஆயத்தங்களில் இருந்துள்ளார் திருடன். உடனடியாக அவரைக் கைது செய்த  போலீசார் அவரிடம் இருந்து லேப்டாப், கத்தி, கஞ்சா ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டைச் சேர்ந்தவர் 25 வயதான முரளி. இவர் காதல் தோல்வி காரணமாக அடிக்கடி உடல் முழுவதும் பிளேடால் கீறிக் கொள்வதால் நண்பர்கள் சைக்கோ முரளி எனப் பெயர் வைத்து அழைத்துள்ளனர். கஞ்சா பழக்கம் கொண்ட முரளி, எந்த வீட்டின் முன்பு தொடர்ந்து சில நாட்கள் கோலம் போடவில்லையோ அதில் ஆளில்லை எனத் தெரிந்து கொண்டு அந்த வீட்டைக் குறிவைத்துக் கொள்ளையடிப்பார்.

2018-ஆம் ஆண்டு, அரும்பாக்கத்தில் கடையில் திருட்டு, கூடுவாஞ்சேரியில் பைக் திருட்டு, கடந்த 1 மற்றும் 15-ஆம் தேதிகளில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து 15,000 ரூபாய் பணம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி திருட்டு என மொத்தம் 3 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.மேலும் படிக்க.. பப்ஜி விளையாட்டில் மூழ்கியிருந்ததை, தாய் கண்டித்ததால் மாணவன் தற்கொலை.. நடந்தது என்ன?ஆனால் ஒவ்வொரு கொள்ளைச் சம்பவத்தின்போதும் கொள்ளையடித்து விட்டு வெளியே வரும்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார். அதேபோல் 4-வது கொள்ளையான செட்டியார் அகரம் வீட்டுக் கொள்ளையின்போதும் போலீசாரிடம் சிக்கி விட்டார். தான் இதுவரை கொள்ளையடித்த பொருட்களை அனுபவிக்க முடியாமல் போலீசாரிடம் சிக்கிக் கொள்வதாக புலம்பியுள்ளார் சைக்கோ முரளி.


 


அயர்லாந்தில் இருந்தபடி மதுரவாயலில் நடந்த கொள்ளையை வீட்டின் உரிமையாளர் கண்டுபிடித்துக் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading