Home /News /tamil-nadu /

கொடநாடு விவகாரம் : சட்டப்பேரவையில் அதிமுகவினர் கடும் அமளி

கொடநாடு விவகாரம் : சட்டப்பேரவையில் அதிமுகவினர் கடும் அமளி

சட்டப்பேரவை

சட்டப்பேரவை

கொடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடோ பழிவாங்கும் எண்ணமோ அரசுக்கு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் பொது விவாதம் தொடங்கியபோது எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து கொடநாடு விவகாரம் குறித்து பேசமுற்பட்டார். இதற்கு சபாநாயகர் அனுமதி வழங்காத தொடர்ந்து, அதிமுகவினர் பேரவைக்கு அரசுக்கு எதிரான பதாகைகளை காட்டியும், கோஷங்களை எழுப்பியதால் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் முதலமைச்சர் விளக்கம் அளிக்க முயற்சி செய்தபோது அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். 

அப்போது சபாநாயகர் அப்பாவு, முதல்வர் பதிலளிக்கிறார் அமைதி காக்க வேண்டும், என்னிடம் அனுமதி பெறாமல் அவையில் எதையும் காட்ட கூடாது. அவைக்கு களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் பதாகைகளை உள்ளே கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், என்னிடம் அனுமதி பெறாமல் பேசுவது தவறு என்று கூறினார். இந்த நிலையில் தொடர்ந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வந்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்பன் குதிருக்குள் இல்லையென இவர்களே கூறிகிறார்கள். கொடநாடு கொலை, கொள்ளை சார்ந்த விவகாரத்தில் தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதியை தான் இந்த அரசு நிறைவேற்றுகிறது. நள்ளிரவில் நடைபெற்ற கொள்ளை சம்பவம், அடுத்தடுத்த மரணங்கள், விபத்து மரணங்கள் மக்களுக்கு அப்போதே சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் கொள்ளை, கொலை வழக்கு  விசாரிக்கப்பட்டு உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அப்போதே வாக்குறுதி கொடுத்தோம் என்றார்.

அதன் அடிப்படையில் முறைப்படி நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தான் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இதில் அரசியல் தலையீடோ, பழிவாங்கும் எண்ணமோ இல்லை என்றும் விசாரணை நடைபெற்று வருகின்றது. அதில் கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் நிச்சயம் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மடியில் கணம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், இதனால் யாரும் பயமோ அச்சமோ கொள்ள தேவையில்லை. இந்த அரசு நிச்சயம் சட்டத்தின் ஆட்சியை நடத்தும். கொடநாடு வழக்கில் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று நடைபெறும் விசாரணையில் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்துக்களைக் தெரிவித்ததால் இந்த பதிலை அளிப்பதாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து அவையை விட்டு வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள் பேரவை வளாகத்தில் அமர்ந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, அரசுக்கு எதிராக கோஷங்கள் ஈடுவதை தான் கண்டிப்பதாகவும், அவை வளாகத்தில் நடந்து கொள்ளும் முறை தவறான முன்னூதாரணம் என்றார். மேலும், அவைக்கு வெளியே விதிகளை மீறி செயல்படும் அதிமுக உறுப்பினர்களை அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

மேலும், எந்த அனுமதியும் இல்லாமல் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு குறித்து திட்டமிட்டு பதாகைகளை கொண்டு வந்து அவையில் கூச்சல் குழப்பங்களின் ஏற்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார். இனி இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெற கூடாது என்றார்.

இதை தொடர்ந்து அதிமுகவின் கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக, புரட்சி பாரதம்  உறுப்பினர்கள் அதிமுகவிற்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published:

Tags: DMK, Kodanadu estate, TN Assembly

அடுத்த செய்தி