• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோடநாடு கொள்ளை கும்பல் எம்.ஜி.ஆர் வாகன பதிவெண்ணை பயன்படுத்தியது ஏன்?

கோடநாடு கொள்ளை கும்பல் எம்.ஜி.ஆர் வாகன பதிவெண்ணை பயன்படுத்தியது ஏன்?

கோடநாடு பங்களா

கோடநாடு பங்களா

கோடநாடு கொள்ளைக் கும்பல் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

  • Share this:
    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. கொள்ளை அடித்த கும்பல், எம்ஜிஆர் பயன்படுத்திய வாகனத்தின் பதிவெண்ணைப் பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளன.

     

    கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கில் நியூஸ் 18 தொலைக்காட்சி பல்வேறு புதிய ஆவணங்களை வெளிப்படுத்தி பல உண்மைகளை அம்பலப்படுத்தி வருகிறது.

    முதல் தகவல் அறிக்கையில் உள்ள குளறு படிகள், கொள்ளை நடந்த அன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது எப்படி? ஓம் பகதூர் இறந்த நேரம் தொடர்பான சந்தேகம் வரை இந்த வழக்கில் மர்மங்களாக பார்க்கப்பட்ட பல விவகாரங்களை அம்பலப்படுத்தியது நியூஸ் 18 தமிழ்நாடு.

    வழக்கில் முக்கிய ஆதாரமாக பார்க்கக் கூடிய பார்வை மகஜர், ஆவண மகஜர் இவற்றில் எழுந்துள்ள குளறுபடிகளையும் நியூஸ் 18 தமிழ்நாடு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

    இந்த நிலையில், இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. கொள்ளைச் சம்பவம் குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு புதிய ஆவணம் ஒன்று கிடைத்துள்ளது.

    காவல்துறையில் ஆஜர் முச்சலிக்கா என்று கூறப்படும் அந்த ஆவணத்தில், கொள்ளை நடந்த அன்று 5 குற்றவாளிகளைப் போலீசார் பிடித்துள்னர். குற்றவாளிகளைப் பிடித்த போலீசார் கூடலுாரில் தங்கள் கட்டுப்பாட்டில் 5 மணி நேரத்திற்கும் மேலாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

    ஆனால் சில அரசியல் தலையீடுகளால் அதன்பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. விடுவிக்கப்பட்ட போது தயாரிக்கப்பட்ட ஆஜர் முச்சலிக்கா ஆவணத்தில், "பின்னர் அழைக்கும்போது விசாரணைக்கு வர வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் அதில், 5 குற்றவாளிகளின் பெயர்களும், அவர்களின் கையெழுத்துக்களும் உள்ளன. அதே போல், கொள்ளையர்கள் கேரளாவைச் சேர்ந்த இன்னோவா மற்றும் என்டோவர் ஆகிய 2 கார்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

    இந்த இரண்டு கார்களின் கேரளப் பதிவெண் பலகைகளை மாற்றி விட்டு, போலி தமிழக பதிவெண் பலகைகளை கனகராஜ் கொடுத்ததாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ஒரு பதிவெண் பலகையை மட்டும் போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

    அதேபோல் குற்றவாளிகள் பயன்படுத்திய காரின் பதிவெண் பலகையை 55 வது பொருளாக போலீசார் குற்றப்பத்திரிகையில் காட்டியுள்ளனர்.

    அந்தப் பதிவெண் TN 43 R 4777 என்பதாகும். இது முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பயன்படுத்திய வாகனத்தின் பதிவெண் ஆகும்.

    எம்ஜிஆர் வாகனத்தின் பதிவெண்ணை போலியாகப் பயன்படுத்திக் கொள்ளையர்கள் இந்தக் கொள்ளையை நடத்தியுள்ளனர் என்பதும் அம்பலமாகியுள்ளது.

    அதேபோல் கொள்ளையர்களில் சிலர் ஜாமினில் விடுவிக்கப்பட்ட பிறகு, பதிவெண் 777 என்பதாக முடியக் கூடிய ஆடி க்யூ 7 ரக கார் ஒன்று, குற்றவாளிகள் சிலரின் வீடுகளுக்கு சென்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது கொள்ளை நடந்த பிறகு குற்றவாளிகளுடன் சிலர் பேரம் பேசியுள்ளதாகத் தெரிகிறது

    இந்த விவரங்கள் கிடைத்துள்ள நிலையில், பல சந்தேகங்கள் அடுக்கடுக்காக எழுகின்றன. ஆஜர் முச்சலிக்காவில் குற்றவாளிகளின் பெயர்கள், கையெழுத்துக்கள் இடம் பெற்றுள்ள நிலையில், அவர்களை விடுவிக்க உத்தரவிட்ட அதிகாரிகளின் பெயர்களும் கையெழுத்துக்களும் இடம் பெறாதது ஏன்?

    கனகராஜ் மாற்றியதாகக் கூறப்பட்ட போலிப் பதிவெண் பலகைகளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்னொரு பலகை எங்கே? போலீசார் அதுகுறித்து விசாரணை நடத்தாதது ஏன்?

    கனகராஜுக்குப் போலி பதிவெண் பலகைகள் தயாரிக்க உதவியது யார்? எப்படி உதவினர்? அவர்களைப் பற்றி போலீசார் இதுவரை விசாரிக்காதது ஏன்? குற்றவாளிகள் வீடுகளுக்கு நேரடியாக சென்று பேரம் பேசக் கூடிய அளவுக்கு செல்வாக்கு படைத்தவர் யார்? ஏன் இந்த சம்பவம் குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தவில்லை? இந்த வழக்கில் குற்றவாளிகள் பயன்படுத்திய வாகனங்கள், போலிப் பதிவெண் பலகைகள் குறித்து போலீசார் இதுவரை தீவிரமான விசாரணையை முன்னெடுக்காதது ஏன்?

    இப்படி பல கேள்விகள் கோடநாடு வழக்கில் எழுந்துள்ள நிலையில், நீதிமன்ற விசாரணையில் உண்மை வெளிவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: