செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ்18 செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் - நீதிபதிகள் இல்ல வளாகத்தில் கோடம்பாக்கம் ஸ்ரீ ஆதரவாளர்கள் அடாவடி

கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீ

சென்னை எழும்பூரில் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

  • Share this:
கடந்த 2019 ஆம் ஆண்டு அய்யபாக்கத்தை சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி சொத்துக்களை அபகரித்ததாக காவல் உதவி ஆணையர் சிவக்குமார் மற்றும் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும், தொழிலதிபர் வெங்கடேஷ் சீனிவாசராவ் ஆகியோர் மீது ராஜேஷ் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரில் நடவடிக்கை எடுக்காததால் இது தொடர்பாக மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜேஷ் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் காவல்துறை அதிகாரிகள் தொடர்பு இருப்பதால் டிஜிபி அலுவலகத்திற்கு இந்த புகாரை சென்னை போலீசார் அனுப்பி வைத்தனர். தமிழக டிஜிபி இந்த புகார் குறித்த முகாந்திரம் இருக்கிறதா என விசாரணை செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலதிபரை கடத்தி நில மோசடி செய்தது தெரியவந்ததால் திருமங்கலம் உதவி ஆணையராக இருந்த சிவகுமார், காவல் ஆய்வாளராக இருந்த சரவணன், காவல் உதவி ஆய்வாளராக இருந்த பாண்டியராஜன், அனைத்திந்திய இந்து மஹா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ ஸ்ரீனிவாசராவ், அவரது மகன் தருண் கிருஷ்ணபிரசாத், சிவா உள்ளிட்ட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

போலி ஆவணங்கள் தயாரித்தல், பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை என பயன்படுத்துதல், மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளிகளைத் தேடும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் கானத்தூர் அருகே கோடம்பாக்கம் ஸ்ரீயை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீயை மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்புக்கு சிபிசிஐடி போலீசார் அழைத்து வந்தனர்.

அப்போது செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சி செய்தியாளரின் மொபைல் போனை பறித்து அநாகரிகமான வார்த்தைகளால் பேசி கோடம்பாக்கம் ஸ்ரீயின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்து தாக்க முற்பட்டனர்.

மேலும் நியூஸ் 18 தமிழ்நாடு ஒளிப்பதிவாளர் வைத்திருந்த கேமராவை கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தினர்.
வெவ்வேறு வழக்குகளுக்காக அங்கு வந்திருந்த காவல்துறையினரிடம் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் தங்களின் உடமைகளுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு கொடுங்கள் என கேட்டபோது, சாரி சார் இது எங்க லிமிட் இல்லை என்று அவர்கள் பின்வாங்கினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் சம்பவ இடம் வந்த எழும்பூர் போலீசார், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மொபைல் மற்றும் கேமராவை சேதப்படுத்திய கோடம்பாக்கம் ஸ்ரீ-ன் ஆதரவாளர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Karthick S
First published: