சட்டசபை தேர்தலையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா இடங்கள் இன்று மூடப்படுகிறது என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர். தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் வனத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. அதன்படி, கொடைக்கானலில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில், பராமரிப்பு பணி மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமைதோறும் மூடப்படுவது வழக்கம். இருப்பினும், இன்று தேர்தலுக்காக மூடப்படுவதால், நாளை முதல் வழக்கம் போல் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தேர்தலை ஒட்டி, இன்று ஒருநாள் மட்டும் தடை விதிக்கப்படுவதாக வனச்சரகர் டேவிட்ராஜா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.