அத்தை மகளுடன் கள்ளக்காதல்: மனைவியை தீர்த்துக்கட்டிய கணவர்

அத்தை மகளுடன் கள்ளக்காதல்: மனைவியை தீர்த்துக்கட்டிய கணவர்
வினோத் குமார்
  • News18
  • Last Updated: October 12, 2019, 4:37 PM IST
  • Share this:
அத்தை மகள் உடனான கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவரையும், அவரின் அத்தை மகளையும் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்த பேத்துப்பாறை பகுதியை சேர்ந்தவர் 35 வயதான விவசாயி வினோத் குமார். இவருக்கும் மதுரை செல்லூர் பூந்தமல்லி நகரை சேர்ந்த ஈஸ்வரிக்கும் கடந்த ஆண்டு நிலக்கோட்டையில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.

கும்பூர் வயல் என்ற இடத்தில் உள்ள முத்து என்பவரின் தோட்டத்தினை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த வினோத் குமார், அந்த தோட்டத்தில் உள்ள வீட்டிலேயே மனைவியுடன் தங்கினார்.


இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 4.30 மணி அளவில் தனது மனைவி துணி துவைக்கும் போது வழுக்கி விழுந்து இறந்து விட்டதாக தனது மாமனாருக்கும், போலீசாருக்கும் வினோத் குமார் தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொடைக்கானல் போலீசார், ஈஸ்வரியின் உடலைக் கைப்பற்றி கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஈஸ்வரியின் மரணம் குறித்து விசாரணையை தொடங்கினர்.

மனைவியின் உடலுடன் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சென்ற வினோத்குமார், பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஒப்படைக்கப்பட்ட மனைவியின் உடலைப் பார்த்து கதறி அழுதபடி இருந்தார். வினோத்குமாரின் நடவடிக்கையில் சந்தேகடைந்த போலீசார் தங்களது விசாரணையை அவர் பக்கம் திருப்பினர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மனைவி துணி துவைக்கும் போது தவறி விழுந்தே இறந்து விட்டதாக திரும்பத் திரும்பக் கூறியுள்ளார் வினோத் குமார். அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த போலீசார் தங்கள் பாணியில் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணை தன் பக்கம் திரும்பியதை அடுத்து, அங்கிருந்து நழுவிய வினோத்குமார், வில்பட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார்.

கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று வினோத்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தனது அத்தை மகள் வேளாங்கண்ணியுடன் சேர்ந்து தனது மனைவியை தீர்த்துக்கட்டியதாக கூறினார்.

இதையடுத்து பெருமாள் மலை அருகே உள்ள கம்பம் நடராஜன் நகர் பகுதியில் மறைந்திருந்த வேளாங்கண்ணியை பிடித்த போலீசார், இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சேர்ந்த 35 வயதான வேளாங்கண்ணி வினோத்குமாரின் அத்தை மகள்.

கடந்த 2012-ம் ஆண்டு வேளாங்கண்ணியின் கணவர் மனோகரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அத்தை மகள் வேளாங்கண்ணிக்கு ஆதரவாக வினோத்குமார் இருந்துள்ளார். இருவருக்கும் இடையிலான உறவு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், 2013-ம் ஆண்டு கொடைக்கானலை சேர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணை வினோத் குமார் திருமணம் செய்தார். வேளாங்கண்ணி உடனான கள்ளத் தொடர்பால் கீர்த்தனா வினோத்குமாரிடமிருந்து விவாகரத்து பெற்றுச் சென்றார்.

இதையடுத்து வேளாங்கண்ணி உடனான கள்ளத்தொடர்பை மறைத்து கடந்த ஆண்டு ஈஸ்வரியை திருமணம் செய்துள்ளார் வினோத்குமார். திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் கும்பூர் வயலில் வினோத்குமார் குடியேறினார் .

திருமணமானவுடன் தன்னை மறந்து விட்டு மனைவியுடன் குடும்பம் நடத்தியதை வேளாங்கண்ணியால் தாங்க முடியவில்லை.

இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பூர் வயலுக்கு சென்று வினோத்குமார் மற்றும் அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதை அடுத்து ஈஸ்வரி கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் சமரசம் பேசி வேளாங்கண்ணியை அனுப்பினர். இனி வினோத்குமாருடன் பழகக்கூடாது என்றும் எச்சரித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த வேளாங்கண்ணி, தங்கள் உறவுக்கு தடையாக இருக்கும் ஈஸ்வரியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். ஈஸ்வரியின் கணவர் வினோத்குமாரிடம் நைசாக பேசி சம்மதம் வாங்கினார். இருவரும் சேர்ந்து ஈஸ்வரியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி வியாழக்கிமை மாலையில் கும்பூர்வயல் பகுதிக்குச் சென்று தனியாக இருந்த ஈஸ்வரியிடம் வேளாங்கண்ணி தகராறு செய்துள்ளார். பின்னர் அவரை கீழே தள்ளி வாயை பொத்தி உள்ளார்.

அப்பொழுது அங்கு மறைந்திருந்த வினோத் குமாரும் சேர்ந்து கைகளையும் கால்களையும் பிடித்துக் கொள்ள வேளாங்கண்ணி ஈஸ்வரியின் வாயையும் மூக்கினையும் இறுக மூடியுள்ளார்.

இதில் மூச்சுத்திணறி வாயில் ரத்தம் கக்கி ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து கொலையை மறைப்பதற்காக அருகில் உள்ள துணி துவைக்கும் இடத்தில் அவரை இழுத்து போட்டுள்ளனர்.

வேளாங்கண்ணியை அங்கிருந்து அனுப்பிவிட்டு, அருகில் இருந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும், போலீசாருக்கும் வினோத்குமார் தகவல் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து இருவரையும் கொடைக்கானல் போலீசார் கைது செய்து நீதிமன்றததில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொலை நடைபெற்ற 10 மணிநேரத்தில் துரிதமாக செயல்பட்டு கொலையாளிகளை கைது செய்த கொடைக்கானல் போலீசாரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

வீடியோ பார்க்க: அத்தை மகளுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக்கட்டிய கணவர்

First published: October 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading