கொடைக்கானல் தனியார் படகு குழாமிற்கு சீல்!

கொடைக்கானல்

  • Share this:
கொடைக்கானலில் விதிமீறி செயல்பட்டு வந்த தனியார் படகு குழாமிற்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் உள்ள 5 படகு குழாம்களில் இரண்டை தனியார் அமைப்புகள் நிர்வகிக்கின்றன. படகு சவாரிக்கு நகராட்சி சார்பில் மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும் நிலையில், Boat and Rowing club மற்றும் தனியார் நட்சத்திர விடுதியும் சுற்றுலாப்பயணிகளிடம் ஒரு மணி நேரத்திற்கு 150 ரூபாய் வரை வசூலித்து வந்தன.

இது தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சியில் பிரத்யேக காட்சிகளுடன் செய்திகள் வெளியிடப்பட்டன. மேலும், 8 சென்ட் மட்டுமே பயன்படுத்த அனுமதி பெற்றுவிட்டு, பத்தாயிரம் சதுர அடிக்கு மேல் ஆக்கிரமித்து கடைகள், கட்டண கழிப்பறை கட்டிக் கொண்டதாக boat and rowing club மற்றும் நட்சத்திர விடுதி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. படகு குழாம் மூலம் வரும் வருவாய், அரசுக்கு கிடைக்கும் வகையில், பொது ஏலம் விட உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானல் படகு குழாமில் படகு போக்குவரத்துக்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இன்று நகராட்சி ஆணையர், காவல்துறை பாதுகாப்புடன் வந்து தனியார் படகு குழாம் மற்றும் நட்சத்திர விடுதியின் படகு குழாமினை பூட்டி சீல் வைத்தனர் அதனை அடுத்து இப்பகுதி பொதுமக்கள் இனிப்பு வழங்கி வெடி வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 
Published by:Vijay R
First published: