அனுமதியின்றி கொடைக்கானலுக்கு சென்ற நடிகர் சூரி மற்றும் விமல் - E-Pass வழங்கியது யார்? நடவடிக்கை பாயுமா?

நடிகர் சூரி நண்பருடன்

கொடைக்கானலுக்கு நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் இ-பாஸ் இன்றி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் நடிகர்கள் கொடைக்கானலுக்கு சென்றது எப்படி? அத்துமீறி ஏரியில் மீன்பிடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 2 ஆயிரம் அபராதம் போதுமானதா?

 • Share this:
  சினிமாவில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் காமெடி கூட்டணி, 3 வனத்துறை ஊழியர்கள் சஸ்பெண்ட் ஆக காரணமாக அமைந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கே வெளியூர் செல்ல முடியாத நிலையில், கொடைக்கானல் சென்று, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் உள்ள ஏரியில் மீன்பிடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறை அலுவலர்கள் சஸ்பெண்ட் ஆன நிலையில், நடிகர்கள் மீது கைது நடவடிக்கை பாயுமா?

  கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் 70 நாட்களுக்கும் மேலாக கொரோனா இல்லாத கொடைக்கானலாக இருந்து வந்தது. ஆனால் கடந்த 20 நாட்களில் அங்கு 170-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

  இதனால் கொடைக்கானலுக்குள் வரும் வெளியூரைச் சேர்ந்த நபர்கள், முறையான இ-பாஸ் மற்றும் கொரோனா தொற்று குறித்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி பிரபல நடிகர்கள் விமல் மற்றும் சூரி இரண்டு இயக்குனர்களுடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர்.

  அத்துடன் வனத்துறையிடம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற்றுச் செல்லும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரி பகுதிக்கு எந்தவிதமான அனுமதியும் இன்றி சென்றுள்ளனர். அங்குள்ள ஏரியில் தடையை மீறி மீன்பிடித்து உள்ளனர்.

  இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான உடன் கொடைக்கானலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மகேந்திரன் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட டி.எஸ்.பி. இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினரிடமும் இது குறித்து விளக்கம் கேட்கப்படும் எனவும் தெரிவித்தார்.

  ஊரடங்கு காலத்தில் விமல், சூரி உள்ளிட்டவர்கள் எப்படி கொடைக்கானல் பகுதிக்கு சென்றார்கள் என்ற கேள்வி பலதரப்பினரிடமும் எழுந்தது. வத்தலகுண்டு அருகே காமக்காப்பட்டி சோதனைச் சாவடி, கொடைக்கானல் மற்றும் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச் சாவடியை நடிகர்கள் எப்படி தாண்டினார்கள்?

  ஒரு வேளை இ-பாஸ் பெற்று சென்றிருந்தால், மருத்துவம், இறப்பு போன்ற அவசர கால நிகழ்வுகளுக்கு செல்லவே இ-பாஸ் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ள நிலையில், நடிகர்கள் சுற்றுலா செல்ல இ-பாஸ் கிடைத்தது எப்படி?

  வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரி பகுதிக்கு சாதாரண நாட்களிலேயே வனத்துறை அலுவலகம் அனுமதி பெற்றுதான் செல்ல முடியும்.  தற்போது ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் எப்படி இவர்களுக்கு பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி கிடைத்தது?

  மோயர் பாயிண்ட் என்ற இடத்தில் உள்ள இரும்பு கேட்டை திறந்து தான் பேரிஜம் ஏரி பகுதிக்கு வாகனங்கள் செல்ல வேண்டும். அப்படி இருக்க, அந்த கேட்டை திறந்துவிட்ட வனத்துறை அதிகாரி யார்?

  ஏரியில் மீன் பிடித்த விமல்


  விமல், சூரி உடன் சில நண்பர்கள் இருப்பதுபோல் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அவர்களுடன் மொத்தம் எத்தனை பேர் சென்றார்கள்? உள்ளே சென்றவர்கள் பேரிஜம் ஏரியில் தடையை மீறி மீன் மட்டும்தான் பிடித்தார்களா? அல்லது வனவிலங்குகளை வேட்டையாடினார்களா?

  இப்படி பொதுமக்களுக்கு ஏராளமான கேள்விகள் எழுந்த நிலையில், இது தொடர்பாக மாவட்ட வன அதிகாரி தேஜஸ்வியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. கடந்த 17ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஊரில் இல்லாத நிலையில், சில கீழ்நிலை ஊழியர்கள் உதவியுடன் நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்ட சிலர் பேரிஜம் ஏரிக்குள் தடையை மீறி சென்றதாக தெரிவித்துள்ளார்.

  இது குறித்து தகவல் கிடைத்த உடன், ந‌டிக‌ர்கள் இருவருக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாக கூறினார். தடையை மீறி அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும், மூன்று வ‌னத்துறை வேட்டை த‌டுப்பு காவ‌ல‌ர்க‌ள் ப‌ணியிடை நீக்க‌ம் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌தாகவும் தேஜஸ்வி தெரிவித்தார்.  கொடைக்கானலுக்குள் விமல், சூரி எப்படி நுழைந்தார்கள் என நகராட்சி துறை அதிகாரிகள் சோதனை சாவடியில் ஆய்வு நடத்தினர். வாகன வருகை பதிவேடு மற்றும் சி. சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது கடந்த 15 ம் தேதி 2 மணிக்கு சூரியின் டொயோட்டா இன்னோவா வாகனம் மற்றும் சென்னை பதிவெண் கொண்ட இரண்டு வாகனங்கள் கொடைக்கானலுக்குள் நுழைந்துள்ளது.

  மீண்டும் 20 தேதி மாலை மூன்று வாகனங்கள் திரும்பி சென்றதும் உறுதியாகி உள்ளது. நடிகர் சூரி மற்றும் விமல் சென்னை திரும்பாமல் கொடைக்கானல் மலைப்பகுதிகளிலேயே தங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

  இரண்டு மாதங்களுக்கு முன் பேரிஜம் ஏரியில் மீன் பிடித்த உள்ளூரைச் சேர்ந்த 7 இளைஞர்களை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து அபராதம் விதித்தனர். தற்போது கொரோனா காலத்தில் வெளியூரிலிருந்து கொடைக்கானலுக்கு வந்து மீன்பிடித்த, பிரபல நடிகர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் விதித்திருப்பது உள்ளூர் மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

  மேலும் விமல், சூரி உள்ளிட்ட நடிகர்கள் முறையான இ-பாஸ் அனுமதி பெற்றுதான் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு வந்தார்களா?  மேலும் படிக்க...

  புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று

  அப்படி இ-பாஸ் வாங்கிவிட்டு கொடைக்கானல் வந்திருந்தால், அத்தியாவசிய காரணத்தை சொல்லி வாங்கிய இ-பாஸ் மூலம் சுற்றுலா சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை பாயுமா?
  Published by:Vaijayanthi S
  First published: