கிரண்பேடி போல மோசமாக தமிழிசை நடக்கமாட்டார் என்று நம்புகிறேன் - கே.என்.நேரு

கே.என்.நேரு

புதுச்சேரியில் கிரண்பேடி மோசமாக செயல்பட்டதைப்போல தமிழிசை சவுந்தர்ராஜன் செயல்படமாட்டார் என்று நம்புகிறேன் என்று தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

  • Share this:
*கிரண்பேடி மோசமான முன்னுதாரணம்*
*மக்கள் பிரதிநிதிகளை அவமானப்படுத்தி, இறுதியில் அவரே அவமானப்பட்டு போனார்*

திருச்சி, பிப். 20.
திமுக திருச்சி வடக்கு, மத்திய  மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில மாநாடு நடைபெறவுள்ள திடல் அருகே சிறுகனூரில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தியாகராஜன், பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசும்போது, ‘திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்ய உள்ளேன். தலைமை யாருக்கு வாய்ப்பளித்தாலும் அவர்களை வெற்றி பெறச் செய்வோம் என்றார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு, ‘விவசாயக் கடன் தள்ளுபடியால் அ.தி.மு.கவினரே பலன் பெற்றுள்ளனர். கூட்டுறவு கடன் சங்கத்தில் அ.தி.மு.கவினரே கடன் பெற்று முறைகேடு செய்துள்ளளனர். ஆதாரத்தை காட்ட முடியாது. ஆனால் ஆட்களை காட்டுகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக அவர்களே தலைவர்களாக உள்ளனர். கூட்டுறவு கடன் சங்கத்தில் தி.மு.கவினர்  கடன் பெற்றதாக தள்ளுபடி செய்யப்பட்டதை நிரூபித்தால் கடனை திருப்பித் தருகிறோம். தி.மு.க ஆட்சி அமைந்ததும் அ.தி.மு.கவினரின் கூட்டுறவு முறைகேட்டை ஆதாரத்துடன் நிருபிப்போம்.

கூட்டுறவு கடன் பெறுவதிலும் முறைகேடு, தள்ளுபடியிலும் முறைகேடு என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், ‘ஒரு ஆளுநர் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு உதாரணம் புதுச்சேரி துணை ஆளுநராக இருந்த கிரண்பேடி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை எவ்வளவு அவமானப்படுத்த  முடியுமோ, அவ்வளவு அவமானப்படுத்தினார். இறுதியில் அவரே அவமானப்பட்டு போனார். இது தற்போது பதவியேற்றுள்ள தமிழிசைக்கும் பொருந்தும். அவர் அப்படி நடத்து கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன் என்றார்.

திருச்சி திமுக மாநில மாநாடு, 360 ஏக்கர் பரப்பளவில் நடக்கிறது. 300-400 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் மட்டும் உள்ளது. சுமார்  7 - 10 லட்சம் பேர் மாநாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். நாளை மறுநாள், (22ம் தேதி) மாநாடு பணிகள் துவங்குகிறது. பத்து  நாட்களில் பணிகள் முடியும். இதுவரை நடந்த மாநாடுகளில் மிகப்பெரிய பரப்பளவில் (750 ஏக்கர்) நடந்த மாநாடு என்ற சாதனை படைக்கும். மாநாட்டில் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்பது குறித்து மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.  அமைச்சர்களின் ஊழல் குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்கிற நம்பிக்கை இருப்பதால்தான் அவரிடம் 2வது புகார் பட்டியலை கொடுத்துள்ளோம். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதைப் போல் என்றார்.
வரும் தேர்தலில் நிச்சயமாக திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’ என்று தெரிவித்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: