ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொள்ளையடித்த பணத்தில் இரண்டு மனைவிகளை சொகுசு வாழ்க்கை வாழவைத்த பலே கில்லாடி!

கொள்ளையடித்த பணத்தில் இரண்டு மனைவிகளை சொகுசு வாழ்க்கை வாழவைத்த பலே கில்லாடி!

பலே கொள்ளையன்

பலே கொள்ளையன்

முகமது சமீருக்கு மும்பையில் சம்சியா அஞ்சும் என்ற முதல் மனைவியும், பெங்களூரில் ஷாருதீன் என்கிற இரண்டாவது மனைவியும் இருப்பதை ஏற்கனவே அறிந்த போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து மும்பை மற்றும் பெங்களூர் விரைந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சென்னை பூக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர குமார் ஜெயின்(52). இவர் அதே பகுதியில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் கடந்த 25 ஆண்டுகளாக உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தும் அமிலங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

ராஜேந்திர குமார் ஜெயின் கடந்த 13 ஆம் தேதி பூக்கடை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் தனது கடையிலுள்ள கல்லாவில் வைத்திருந்த 6 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் தனது மகளின் திருமணத்திற்கு நகைகள் செய்ய வைத்திருந்த 100 கிராம் எடைகொண்ட இரண்டு தங்கக் கட்டிகளைக் காணவில்லை எனவும், காணாமல்போன தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தை கண்டுபிடித்துத் தருமாறும் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடை ஊழியரான மனோஜ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தான கடையில் இருந்தபோது ராஜேந்திர குமாரின் நெருங்கிய நண்பர் எனக்கூறி கடைக்குள் வந்த நபர், சிறிது நேரம் கழித்து தலை வலிப்பதாகவும் வெளியில் சென்று தேனீர் வாங்கி வருமாறு கூறியதாகவும் தெரிவித்தார். மேலும், தனது முதலாளியின் நண்பர் என்பதால் தானும் சென்று தேநீர் வாங்கி வந்ததாகவும், அப்போது அந்த நபர் தேநீர் வேண்டாமென கூறிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து போலீசார் கடையிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைக்கு வந்த நபர் கடையின் கல்லாவில் திருட்டு சாவி போட்டு தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தை எடுத்து பைக்குள் போட்டு கொண்டு செல்வது பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து அந்த நபர் பூக்கடை காவல் மாவட்டத்திலேயே பல்வேறு கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளவரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பழைய சி.சி.டி.வி காட்சிகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்ததில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பழைய குற்றவாளியான பெங்களூரைச் சேர்ந்த முகமது சமீர் (29) என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் மும்பையில் தலைமறைவாக இருந்த சமீரை கைது செய்தனர்.

Also Read: நடிகர் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில் போலி ஐ.டி.ரெய்டு.. 5 பேர் கைது..

முகமது சமீருக்கு மும்பையில் சம்சியா அஞ்சும் என்ற முதல் மனைவியும், பெங்களூரில் ஷாருதீன் என்கிற இரண்டாவது மனைவியும் இருப்பதை ஏற்கனவே அறிந்த போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து மும்பை மற்றும் பெங்களூர் விரைந்தனர். முகமது சமீர் அரங்கேற்றும் கொள்ளைச் சம்பவங்களின் பாணி மற்றும் அவர் ஒவ்வொரு முறை கொள்ளையடிக்கும் பணத்தை முதல் மனைவி மற்றும் இரண்டாம் மனைவிக்கு மாறிமாறி கொடுத்து வரும் வழக்கம் கொண்டவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும்,  விசாரணையில் முகமது சமீர் தான் கொள்ளையடிக்கும் பணத்தை ஆடம்பர வாழ்க்கைக்காக பயன்படுத்தி வந்ததும், கடைசியாக கொள்ளையடித்த பணத்தில் 6 லட்சம் ரூபாய்க்கு புதிய கார் ஒன்றும் 1 லட்சம் ரூபாய்க்கு விலை உயர்ந்த வாஷிங் மிஷின் போன்ற பொருட்களை தனது இரு மனைவிகளின் வீட்டிற்கு வாங்கிக் கொடுத்து சொகுசு வாழ்க்கையை நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து முகமது சமீரால் கொள்ளையடிக்கப்பட்ட 6 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் சுமார் 15 லட்சம் மதிப்புடைய 200 கிராம் தங்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யும் முயற்சியில் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெங்களூரிலும் தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்தும் மீட்கப்படும் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read:   பெண்களே உஷார்… கணவன் மனைவி பிரச்சனையை அடுத்த ஆணிடம் சொல்ல வேண்டாம் – இதைப் படியுங்க!

இவர் இதே பாணியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு பூக்கடை காவல் நிலையம், யானைக்கவுனி காவல் நிலையம், வடக்கு கடற்கரை காவல் நிலையம் போலீசாரால் பலமுறை கைது செய்யப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Crime News