புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக சிறுநீரக கல்லை, அறுவை சிகிச்சையின்றி நீக்கி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், பூண்டியைச் சேர்ந்த மாலா, நீண்டகாலமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 13ஆம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாலாவின் வலதுபக்க சிறுநீரகத்தில் கல் இருப்பதைக் கண்டறிந்தனர். அறுவை சிகிச்சையின்றி கல்லை அகற்ற முடிவு செய்த மருத்துவர்கள், அகநோக்கி என்னும் நெப்ரோஸ்கோப்பி மூலம் அதனை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
தனியார் மருத்துவமனையில் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகக் கூடிய இந்த சிகிச்சை, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், இலவசமாகச் செய்யப்பட்டதாகக் கூறுகிறார் மீனாட்சி சுந்தரம்.
தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பல நாட்கள் தாமதமான நிலையில், புதுக்கோட்டை மருத்துவமனையில் ஒரே நாளில் சிகிச்சை செய்யப்பட்டு உடல் நிலை தேறி விட்டதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் மாலா.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளதாகவும், அதைப் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், சாதாரணமாக சிறுநீரக வழியில் இருக்கும் கற்களை அறுவை சிகிச்சையின் மூலம்தான் அகற்றுவது வழக்கமாக இருந்து வந்தது என்றும் அப்படி செய்யும்போது நோயாளி 15 நாட்களுக்கு மேல் மருத்துவமனையிலேயே தங்கி இருக்க வேண்டிய நிலை இருக்கும். அது மட்டுமின்றி, அறுவை சிகிச்சை செய்வதால் குடல் இறக்க நோய் வர வாய்ப்பு உண்டு என்றும் கூறினார்.
மேலும், அந்த சிரமங்களைத் தவிர்க்கவே இந்தப் பெண்மணிக்கு அகநோக்கி மூலம் சிகிச்சை. சிறுநீரகத்தில் உள்ள கற்களை அகற்ற உதவும் இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்து இருந்தால் ரூபாய் ஒரு லட்சம் வரையில் செலவாகி இருக்கும் என்றும், ஆனால் காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் வெற்றிகரமாக இந்த சிகிச்சையை மேற்கொண்டதால் தற்போது அந்தப் பெண்மணி நலமுடன் உள்ளதாகவும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளதாகவும் பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.