தேர்வு நடத்தாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடியாது எனத் தெரிவித்த
சென்னை உயர் நீதிமன்றம், கொரோனா பேரிடர் காரணமாக ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு தேர்வுக்கு மதிப்பெண் சான்று வழங்க கோரி கேரளா மாணவி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்த தமிழக அரசு, மதிப்பெண்கள் வழங்காமல் மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கும்படி 2021 ஜூலை 26ல் அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த நக்ஷத்திரா பிந்த் என்ற மாணவி, கேரளா பள்ளியில் 11ம் வகுப்பு சேர மதிப்பெண் சான்று கேட்பதால், தனக்கு சான்றிதழ் வழங்கக் கோரியும், மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி சான்று வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, தமிழ்நாடு அரசு மட்டுமல்லாமல் பல மாநிலங்கள் தேர்வு நடத்தாமல் மதிப்பெண்கள் வழங்காமல் தேர்ச்சி சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும், அரசின் கொள்கை முடிவில் எந்த சட்டவிரோதமும் இல்லை என சுட்டிக்காட்டியது.
மேலும், தேர்வு நடத்தாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.