கேரளா மாநிலம் பாலக்காட்டில் கன
மழை நேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போலீஸ் வாகனம் திடீரென தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்ட வசமாக டிஎஸ்பி மற்றும் ஓட்டுநர் உயிர் தப்பினர்.
கேரளா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு அருகே பனையம்பாடத்து என்ற இடத்தில் அகளி டிஎஸ்பி முரளீதரன் மற்றும் ஓட்டுநர் சென்று கொண்டிருந்த கேரளா போலீஸ் வாகனம் திடீரென கவிழ்ந்தது.
இந்த விபத்தில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. வாகனத்தில் இருந்த டி.எஸ்.பி முரளீதரன் மற்றும் டிரைவர் இருவரையும் பொதுமக்கள் மீட்டு தச்சம்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். விபத்து ஏற்பட்ட பகுதி அடிக்கடி வாகன விபத்து ஏற்படும் ஆபத்து நிறைந்த பகுதியாகும்.
விபத்து நடந்த நேரம் கனமழை பெய்து வந்ததால் சாலையில் போலீஸ் வாகனம் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இருந்து தடுமாறி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.