தமிழில் பதவியேற்ற கேரள எம்.எல்.ஏ செய்த தவறு: மீண்டும் பதவியேற்க வேண்டிய நிலை - ஏன் தெரியுமா?

தேவிகுளம் எம்.எல்.ஏ, அந்தோனி ராஜா

தேவிகுளம் கேரளாவில் இருந்தாலும் அங்கு பெரும்பாலான மக்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டுள்ளனர்.

  • Share this:
நடந்து முடிந்த கேரள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் எம்.எல்.ஏக்கள் பதவிப்பிரமாணம் எடுத்தும் கொள்ளும் நிகழ்ச்சியில் தாய் மொழியான தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக தமிழகம், கேரளா என இரு மாநிலங்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தேவிகுளம் எம்.எல்.ஏ ராஜா.

தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 51% வாக்குகளுடன் வெற்றி பெற்றிருப்பவர் சிபிஎம் கட்சியின் அந்தோணி ராஜா.

கேரள சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த மே 24ம் தேதி புதிய எம்.எல்.ஏக்களின் பதவிப் பிரமாணத்துடன் அரங்கேறியது. இதில் தேவிகுளம் எம்.எல்.ஏவான ராஜா தன்னுடைய தாய் மொழியான தமிழில் உறுதி மொழி எடுத்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் பலரும் வியப்பும், ஆச்சரியமும் அடைந்தனர். இதற்காக கேரள சட்டசபை செயலரின் அனுமதியையும் முன் கூட்டியே அவர் பெற்றார்.

இருப்பினும் அவர் பதவிப்பிரமாணத்தின் போது செய்த சிறிய தவறால் மீண்டும் பதவிப்பிரமாணம் செய்ய வேண்டிய நிலை ராஜாவிற்கு ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக அரசியலைப்பின்படி பதவியேற்றுக்கொள்பவர்கள் கடவுளின் பெயரால் அல்லது உளமார கூறுகிறேன் என உறுதிகூற வேண்டும். ஆனால் ராஜா பதவியேற்பின் போது உளமார என்ற வார்த்தைக்கு பதிலாக உறுதி கூறுகிறேன் என மட்டும் கூறியதாக தெரிகிறது.



இதனையடுத்து சபாநாயகர் எம்.பி.ராஜேஷ் இந்த விவகாரத்தை சட்டசபை செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இந்நிலையில் ராஜா மீண்டும் பதவியேற்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read More:   தடுப்பூசி கொடுத்து உதவியதற்கு கைமாறு: மெகுல் சோக்ஸியை இந்தியாவிடம் ஒப்படைக்கிறதா டொமினிகா?

36 வயதாகும் ராஜா கேரளாவின் இளம் எம்.எல்.ஏக்களுள் ஒருவராக விளங்குகிறார். அந்தோணி லக்‌ஷமனன் மற்றும் ஈஸ்வரி என்ற தோட்டத்தொழிலாளிகளின் மகனான ராஜா தேவிகுளத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் தாய் மொழியான தமிழிலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை முடித்திருக்கிறார். கோவையில் உள்ள சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் அவர் தமிழிலேயே படித்திருக்கிறார். 2018ம் ஆண்டு முதல் அரசு வக்கீலாகவும் இருந்து வருகிறார் ராஜா.

ராஜா தமிழில் பதவியேற்ற நிலையில் கர்நாடக மாநில எல்லையான மஞ்சேஸ்வரம் தொகுதி எம்.எல்.ஏவான அஸ்ரஃப், தனது தாய்மொழியான கன்னடத்தில் பதவிப்பிரமாணம் எடுத்திருக்கிறார். மேத்யூ குழல்நாதன் மற்றும் மணி ஆகிய இரு எம்.எல்.ஏக்கள் ஆங்கிலத்தில் பதவியேற்றிருக்கின்றனர்.

Read More:  பச்சை நிறத்தில் மாறிய கங்கை நதி: ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

தேவிகுளம் கேரளாவில் இருந்தாலும் அங்கு பெரும்பாலான மக்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டுள்ளனர். மொழிவாரி மாநில பிரிப்பின் போது மதராஸ் மாகாணத்தில் இருந்த தேவிகுளம் கேரளாவின் எல்லைக்குள் சென்றது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: