ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'அந்த முதல்வரின் பெயர் பினராயி விஜயன் இல்லை மு.க.ஸ்டாலின்!' - வைரலாகும் மலையாள வீடியோ!

'அந்த முதல்வரின் பெயர் பினராயி விஜயன் இல்லை மு.க.ஸ்டாலின்!' - வைரலாகும் மலையாள வீடியோ!

MK Stalin vs pinarayi vijayan

MK Stalin vs pinarayi vijayan

இதையெல்லாம் ஒரு முதல்வர் 100 நாட்களுக்குள் அமல்படுத்தியிருக்கிறார். அந்த முதல்வரின் பெயர் பினராயி விஜயன் இல்லை, மு.க.ஸ்டாலின்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றி கேரளாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் புகழ்ந்து பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில் முதல்வராக 100 நாட்களை பூர்த்தி செய்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆரம்ப நாள் தொடங்கி தற்போது வரையில் பல நல்ல திட்டங்களை அமலுக்கு கொண்டு வந்ததன் மூலம் அனைத்து தரப்பினராலும் பாராட்டு பெற்று வருகிறார். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றது முதல் அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தமிழகம் தாண்டியும் பாராட்டு பெற்று வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் 100 நாட்களை பூர்த்தி செய்த மு.க.ஸ்டாலினின் ஆட்சி குறித்து கேரளாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சி பேசப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ பி.சி.விஷ்ணுநாத் என்பவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட 100 நாட்களில் என்ன திட்டங்களையெல்லாம் அமலுக்கு கொண்டு வந்திருக்கிறார் என்பது குறித்து விரிவாக பேசினார்.

அவர் கூறுகையில், “மொத்தமாக இல்லை, என்னால் ஒரு சில விஷயங்கள் மட்டும் கூற முடியும். 2 கோடி குடும்பங்களுக்கு தலா 4,000 ரூபாய் பணமும், அத்துடன் 14 வகையான மளிகை பொருட்களையும் வழங்கியிருக்கிறார். அதிகரித்து வரும் பெட்ரோல் விலையை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலையில் 3 ரூபாயை குறைத்திருக்கிறார். பெண்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் பேருந்தில் இலவச பயணம், கொரோனா பேரிடர் காலத்தில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு கூடுதலாக 30,000 ரூபாயும், செவிலியர்களுக்கு 20,000 ரூபாயும், பிற சுகாதார பணியாளர்களுக்கு 15,000 ரூபாயும் வழங்கியிருக்கிறார். ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்கள் என வகைப்படுத்தி, அவர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார், இதையெல்லாம் ஒரு முதல்வர் 100 நாட்களுக்குள் அமல்படுத்தியிருக்கிறார். அந்த முதல்வரின் பெயர் பினராயி விஜயன் இல்லை, மு.க.ஸ்டாலின்” இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

பொதுவாக கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோரை தமிழகத்தில் ஒரு தரப்பினர் பாராட்டி வரும் நிலையில், கேரள அரசியல்வாதி ஒருவரே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியிருப்பது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது

இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி பேசும் வீடியோ தமிழகம் மட்டுமல்லாது கேரளாவிலும் வைரலாக பரவி வருகிறது. அங்கு ஆளும் கட்சியினரை விமர்சிக்கும் வகையில் இந்த வீடியோவை எதிர்கட்சியினர் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: DMK, Kerala CM Pinarayi Vijayan, MK Stalin