ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தலையாட்டி பொம்மையாக இருக்க முடியுமா? மார்க்சிஸ்ட் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தலையாட்டி பொம்மையாக இருக்க முடியுமா? மார்க்சிஸ்ட் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

திராவிட மற்றும் கம்யூனிஸ்ட் உறவு என்பது 80 ஆண்டுகள் வரலாறு கொண்டது. தமிழகத்தில் பெரியார் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்தார். எல்லாவற்றுக்கும் மேலாக என் பெயர் ஸ்டாலின் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். மாநிலங்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து நாம் போராட வேண்டும். தென்மாநிலங்களின் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 23-வது மாநில  மாநாடு, கேரளா மாநிலம் கண்ணூரில் நடைபெற்றது.  இதில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். மத்திய - மாநில அரசு உறவுகள் எனும் தலைப்பில் பேசிய மு.க.ஸ்டாலின்,  இந்த மாநாட்டில் கலந்துகொள்வது  எனது கடமை. சகாவு பினராயி விஜயன் எனக்கு தரும் அன்பு இதற்கு முக்கிய காரணம்.  தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் இடையேயான உறவு என்பது சங்க காலம் முதல் உள்ளது.

  திராவிட மற்றும் கம்யூனிஸ்ட் உறவு என்பது 80 ஆண்டுகள் வரலாறு கொண்டது. தமிழகத்தில் பெரியார் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்தார். எல்லாவற்றுக்கும் மேலாக என் பெயர் ஸ்டாலின். கண்ணூர் என்பது வீரத்தின், தியாகத்தின் நிலம். கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகம் தோழர்கள் உயிர் கொடுத்த இடம் கண்ணூர். எனக்கு வழிகாட்டும் முன்னோடு முதல்வராக பினராயி விஜயன் இருந்தார் என்று பாராட்டு தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய ஸ்டாலின்,  வேற்றுமையில் ஒற்றுமை தான் நமது பண்பாடு. ஆனால், இந்த வேற்றுமையை அழித்து ஒற்றை தன்மையை உருவாக்க நினைக்கிறார்கள். ஒரே நாடு, தேர்தல், கல்வி, பண்பாடு, கலாச்சாரம் என்று எல்லாவற்றிலும் ஒற்றை தன்மையை கூறுகிறார்கள். இப்படியே போனால் ஒரே கட்சியாக ஆகிவிடும். பின்னர் ஒரே ஆள் என்று ஆகிவிடும். ஒரே ஆள் என்றால் பாஜகவும் நம்மோடு சேர்ந்து எதிர்க்கதான் வேண்டும்.

  இதையும் படிங்க: மூன்று மொழித் திட்டம் என்பது எந்த அர்த்தமும் இல்லாதது- அமித்ஷா கருத்துக்கு அமைச்சர் பி.டி.ஆர் எதிர்ப்பு

  ஆங்கிலேயர்கள்  உருவாக்கிய சட்டத்தில் கூட தன்னாட்சி ஆட்சி முறை தான் வழங்கினர். ஆங்கில ஆட்சி கூட செய்யாததை இன்றைய பாஜக அரசு செய்கிறது. கேரள முதல்வரும், நானும் போராடுவது வெறும் மாநிலங்களுக்கு மட்டும் அல்ல. திட்டக்குழு, தேசிய வளர்ச்சிக்குழு, ரயில்வே தனி பட்ஜெட் என அனைத்தையும் மத்திய  அரசு கலைத்துவிட்டது. நாடாளுமன்றத்திலும் விவாதம் நடத்துவது கிடையாது.

  எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் ஆளுநர் மூலம் ஆட்சி செய்வதுதான் சட்டத்தின் ஆட்சியா? தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய நீட் மசோதாவை இன்னமும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் தாமதித்து வருகிறார். தலையாட்டி பொம்மையாக இருந்தால் அமைதியாக இருப்பார்கள். அதற்காக தலையாட்டி பொம்மையாக இருக்க முடியுமா?

  மேலும் படிக்க: மாயாவதிக்கு முதலமைச்சர் பதவியை வழங்க முன்வந்தோம்: ராகுல் காந்தி

  இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். மாநிலங்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து நாம் போராட வேண்டும். தென்மாநிலங்களின் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அதற்கு அரசியல் எல்லைகளைக் கடந்து நாம் ஒன்றிணைய வேண்டும் என்று பேசினார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Kerala, Marxist Communist Party, MK Stalin