கேரளாவில் லாட்டரி குலுக்கலில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு முதல் பரிசாக ரூ.10 கோடி விழுந்துள்ளது. உறவினர் ஒருவரை அழைத்து வருவதற்காக திருவனந்தபுரம் சென்றபோது லாட்டரி வாங்கியதாகவும், அதன் மூலம் தனக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளதாகவும் மருத்துவர் ஆச்சரியம் பொங்க கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அதிகாரப்பூர்வமாக கேரளா அரசின் கீழ் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பண்டிகையின்போதும் மெகா பம்பர் குலுக்கல் சீட்டு விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான திலீப் நடித்த " கேசு ஈ வீடிண்டே நாதன் " படத்தில் நடந்த சம்பவம் போல் வேறொரு சம்பவம் குமரி மாவட்டத்தில் அரங்கேறியது.
படத்தில் முதல் பரிசு பெற்ற சீட்டை தொலைத்து அதை தேடும் சுவாரசியமான சம்பவங்கள் என்றால் நிஜத்தில் விஷு பம்பர் முதல் பரிசு பெற்ற லாட்டரி வாங்கிய நபரை கேரளா அரசே தேடி வந்த சம்பவம் தான் சுவாரஸ்யம். விஷூ ஆண்டு பிறப்பை முன்னிட்டு ரூபாய் 10 கோடிக்காக லாட்டரி பரிசுச்சீட்டு விற்பனை நடத்தப்பட்டது. இந்த 10 கோடி பரிசுத்தொகைக்காக 43 லட்சத்து 69 ஆயிரம் லாட்டரி சீட்டு அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
முதல் பரிசான 10 கோடி ரூபாய் எச்பி 727990 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 22ம் தேதி வெளியானது. ஆனால், 10 கோடியை வென்ற லாட்டரிச்சீட்டின் எண் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியும் யாருமே கேரள அரசை அணுகவில்லை. திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே சில்லறை விற்பனை செய்யும் வல்லக்கடவு ரங்கன் என்பவர் கடையில்தான் இந்த லாட்டரிச்சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் 2வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.. மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்
இதனால், இந்த லாட்டரி சீட்டை வாங்கியவர் வெளியூர் அல்லது வெளிநாட்டைச் சேர்நதவராக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வந்தனர். ரூபாய் 10 கோடி பரிசுத்தொகையை வென்ற லாட்டரிச்சீட்டு உரிமையாளர் யார்? அவர் எங்கே இருக்கிறார்? என்று கேரளா முழுவதும் ஒரே பரபரப்பாக தேடி வந்தனர். கேரள அரசும் அவரைத் தீவிரமாக தேடி வந்தது.
மேலும் படிக்க: தமிழக அளவில் யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பெற்ற கோவை பெண்- தொடர் முயற்சியில் சாத்தியமான கனவு
விஷூ பம்பர் லாட்டரிச்சீட்டு விற்பனைக்கான மொத்த பரிசுத்தொகை ரூபாய் 34 கோடி ஆகும். முதல் பரிசு ரூபாய் 10 கோடி ஆகும். இரண்டாவதுப பரிசு ரூபாய் 50 லட்சம் ஆகும். மூன்றாவது பரிசு 12 நபர்களுக்கு ரூபாய் 60 லட்சம் ஆகும். அதாவது ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் 5 லட்சம் ஆகும். 10 கோடி ரூபாய் முதல் பரிசுக்கான இந்த லாட்டரி விற்பனை ரூபாய் 250 கோடிக்கு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் தான் அந்த அதிர்ஷ்டம் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அரசு மருத்துவர் மற்றும் அவரது உறவினர் ஆகிய இருவர் என்பது தெரிய வந்தது. கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த டாக்டர் பிரதீப் குமார் மற்றும் அவரது உறவினரான ரமேஷ் ஆகியோர் சேர்ந்து இந்த லாட்டரி சீட்டை திருவனந்தபுரத்தில் வாங்கியுள்ளனர்.
இவர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உறவினர் ஒருவரை அழைத்து வர சென்ற போது வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு கிடைத்தது. அவர்கள் அறியாத நிலையில், தங்களுக்குரிய எண்ணுக்கு தான் பரிசு கிடைத்துள்ளது என அறிந்து திருவனந்தபுரம் விரைந்து லாட்டரி துறையில் அலுவலகத்திற்கு சென்று விவரத்தை தெரிவித்துள்ளனர். விரைவில் அவர்களுக்குரிய பரிசு தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனக்கு பரிசு கிடைத்தது குறித்து டாக்டர் பிரதீப் குமார் கூறுகையில் குலுக்கல் நடைபெற்று மூன்று நாட்களுக்கு பின்னரே தாங்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு விழுந்தது தெரியவந்ததாகவும் அதன் பின்னர் தங்கள் ஊரில் நடைபெற்ற திருவிழா மற்றும் உறவினர் ஒருவரின் மரணம் என பல வேலைகளுக்கு பின்பு இன்று கேரள அரசு லாட்டரி அலுவலகத்தில் சென்று லாட்டரி சீட்டை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த பரிசு கிடைத்தமைக்காக இறைவனுக்கு நன்றி கூறினார்.
வழக்கமாக லாட்டரி வாங்கும் பழக்கம் இல்லாத இவர் எதேர்ச்சையாக வாங்கிய லாட்டரி சீட்டு க்கு 10 கோடி முதல் பரிசு பெற்ற சம்பவம் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு இன்றி எங்கு இருந்தாலும் அதிர்ஷ்டம் தங்களை தேடி வரும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.