நிலச்சரிவில் குடும்பத்தினர் 14 பேரை இழந்த இளைஞர்... பெற்றோரை இழந்த இரு பெண்கள்...!

நிலச்சரிவில் குடும்பத்தினர் 14 பேரை இழந்த இளைஞர்... பெற்றோரை இழந்த இரு பெண்கள்...!

விஜய் | சரண்யா மற்றும் அன்ன லட்சுமி

கேரள மாநிலம் மூணாறு அருகே நடந்த நிலச்சரியில் தனது குடும்பத்தினர் 14 பேரை இழந்து தனி மரமாகியுள்ளார் கோவில்பட்டியை சேர்ந்த விஜய்

  • News18
  • Last Updated :
  • Share this:
கேரளாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் இடைவிடாத மழையானது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாவட்டம் பெரும்பாலும் மலைப்பகுதி என்பதால் கடந்த வியாழக்கிழமை 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் முற்றிலுமாக சேதமடைந்து மண்ணுக்கடியில் புதைந்திருக்கலாம் என்று அச்சப்படுகிறது. அந்த குடியிருப்புகளில் இருந்த 80 பேர் வரை மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. 43 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகின்றன. இப்பகுதியில் பணியாற்றிய அனைவரும் தமிழகத்தின் தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தினை சேர்ந்தவர்கள். அதிலும் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் பாரதிநகரைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். இந்த நிலச்சரிவில் சண்முகையா என்பவரது குடும்பத்தினை சேர்ந்த 14 பேர் உயிரிழந்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடைய மனைவி மட்டும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சண்முகையாவின் மகன் விஜய் கயத்தாறில் இருந்த காரணத்தினால் அவரும் உயிர் தப்பியுள்ளார்.

16 பேர் கொண்ட குடும்பத்தில் 2 பேர் மட்டுமே தற்பொழுது உயிரோடு இருக்கின்றனர். சண்முகையாவிற்கு 2 மனைவிகள், அதில் ஒருவர் மட்டும் இப்போது உயிரோடு உள்ளார். நிலச்சரிவு விபத்தில் சண்முகையா, அவரது ஒரு மனைவி, 3 மகள்கள், 3 மருமகன்கள், 6 பேரன், பேத்திகள் 14 பேரும் நிலச்சரிவில் இழந்து விட்டு கயத்தாரில் தனிமரமாக நிற்கிறார் விஜய்.

கோவாவில் வேலை பார்த்து வந்ததால் விஜய் கடந்த ஓராண்டாக தனது குடும்பத்தினை பார்க்கமால் இருந்துள்ளார். அடிக்கடி தொலைபேசியில் மட்டும் குடும்பத்தினருடன் பேசி வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கயத்தாருக்கு வந்தவருக்கு நிலச்சரிவு என்ற பேரவு, தனது குடும்பத்தை அழித்து அதிர்ச்சியை மட்டும் மிச்சம் வைத்துள்ளது.

இது குறித்து விஜய் கூறுகையில், குடும்பத்தில் அனைவரையும் இழந்தது மிகுந்த மன வேதனையை அளிப்பதாகவும், இதுவரை 5 பேர் உடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது என்றும், மிகுந்த சிரமத்திற்கு இடையே உயிரிழந்தவர்களின் உடல்களை பார்த்தலும் அடையாளம் காணமுடியவில்லை என்றும், தனது பெற்றோர் வாழ்ந்த இடம் தற்பொழுது தரை மட்டமாக இருப்பதை பார்த்ததாகவும், தனது பெற்றோர் அங்கு வேலையை விட்டு,விட்டு கயத்தாறில் வந்து தங்குவதாக கூறி இருந்த நிலையில் தற்போது நிலச்சரிவில் உயிர் இழந்துவிட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தான் தனிமரமாக நிற்பதாகவும், தன்னை போன்ற குடும்பங்களுக்கு அரசு உதவ வேண்டும், உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வி செலவினை அரசு ஏற்க வேண்டும், தகுதியானவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

விஜய் குடும்பத்தினை போன்று பாதிக்கப்பட்ட மற்றொரு குடும்பம் முருகன் குடும்பத்தினர். கயத்தார் பாரதி நகரைச் சேர்ந்த முருகன், அவரது மனைவி ராமலெட்சுமி, இவர்களுக்கு நிஷாந்தினி, சரண்ய, அன்னலெட்சுமி என்ற 3 மகள்கள். இதில் நிஷாந்தினி பெங்களுரில் நர்சிங் படித்து வந்தவர் கொரோனா ஊரடங்கு காரணமாக பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். சரண்யா நர்சிங் பயிற்சிக்காக ராஜபாளையத்தில் இருந்துள்ளார். மற்றொரு மகள் அன்னலெட்சுமி கயத்தாரில் தனது தத்தா வீட்டில் தங்கி 12ம் வகுப்பு படித்து வருவதால் அவரும் கயத்தாரில் இருந்துள்ளார்

இந்த நிலச்சரிவில் முருகன், அவரது மனைவி ராமலெட்சுமி, மூத்த மகள் நிஷாந்தினி ஆகிய 3 பேரும் உயிரிழந்து விட , முருகனின் மற்ற இருமகள்கள் சரண்யா, அன்னலெட்சுமி இருவரும் நிற்கதியாக இருக்கின்றனர். தனது குடும்பமே அழிந்து விட்டது, கேரளாவிற்கு சென்றும் பெற்றோர் மற்றும் சகோதிரி உடலை பார்க்க முடியவில்லை என்கிறார் கண்ணீருடன் சரண்யா கடைசியாக பெற்றோரை டிசம்பர் மாதம் பார்ததாகவும், கேரளா சென்ற போதும் பெற்றோர் உடலை பார்க்கவிடவில்லை, நிற்கதியாக இருக்கும் தங்களுக்கு அரசு தான் உதவ வேண்டும், தனக்கு அரசு வேலை கொடுத்தால் தன்னுடைய இளைய சகோதரியை பார்த்துக்கொள்வோம் என்கிறார் வேதனையுடன்.

நிலச்சரிவினால் குடும்பத்தினை இழந்து நிற்கதியாக இருப்பவர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்பது தான் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Published by:Sankar
First published: