சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்க உள்ளார். அகழாய்வுப் பணிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன.
கீழடியில் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆராய்ச்சியைத் தொடங்கியது.
10.5 மீட்டர் ஆழம் கொண்ட 42 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. 6 மாதங்கள் வரை நடந்த அகழாய்வில் 1,600 பொருள்கள் கண்டறியப்பட்டன. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மூன்று உறைகிணறுகள், பானை ஓடுகள், கண்ணாடி மணிகள், சுவர்கள், சங்க கால நாணயங்கள் ஆகியவை கண்டறியப்பட்டன.
பின்னர், 2016 ஜனவரி மாதம் 2ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இதில் மருத்துவ குடுவைகள், பழங்காலக் கிணறு, தொழிற்சாலை, அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன. இதன் மூலம், தமிழர்கள் கிமு.6ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றவர்கள் என்பதும், தமிழே உலகின் மூத்த மொழி என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, 2017 ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட 3ஆம் கட்ட அகழாய்வில் தோல்பொருட்கள், தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, விளையாட்டுக் காய்கள், காதணிகள், இரும்பு உளிகள் உள்ளிட்டவை கிடைத்தன. முதல் 3 கட்ட அகழ்வாராய்ச்சிகளை மத்திய தொல்லியல்துறை மேற்கொண்ட நிலையில், 4 மற்றும் 5வது கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. அதில், சுடுமண் பொம்மைகள், தங்கம், வெள்ளி பொருட்கள், தமிழ் எழுத்து பொறித்த பானை ஓடுகள் உள்ளிட்ட 15,500 தொன்மை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து, அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் கீழடியில் சர்வதேச தரத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக கீழடி அரசுப் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 12 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.
ஆய்வுக்காக கீழடியில் உள்ள கருப்பையாவின் நிலத்தை சுத்தம் செய்யும் பணிகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து, அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடக்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளர் ஆசைத்தம்பி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chief Minister Edappadi Palanisamy, Keezhadi, Sivagangai