கி.மு ஆறாம் நூற்றாண்டில் தமிழர்களிடம் எழுதும் பழக்கம் - கீழடி நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியீடு

Web Desk | news18
Updated: September 19, 2019, 3:47 PM IST
கி.மு ஆறாம் நூற்றாண்டில் தமிழர்களிடம் எழுதும் பழக்கம் - கீழடி நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியீடு
கீழடி
Web Desk | news18
Updated: September 19, 2019, 3:47 PM IST
கீழடியில் தமிழக அரசு நடத்திய நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட காளையின் திமில் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் பண்பாடு 2600 ஆண்டுகள் பழமையானது என்பது அங்கு நடந்த நான்காம் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சிந்து,கங்கை நதிக்கரை நாகரிகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரிகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு, கலையறிவு, பெருநகர வாழ்வு என வைகை கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.


வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.

2015 முதல் 2017 வரை இந்தப் பகுதியில் மத்திய தொல்லியல்துறை ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் தமிழக அரசு 55 லட்சம் செலவில் 2018 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நான்காம் கட்ட ஆய்வை மேற்கொண்டது. கீழடியில் 2018-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழ்வாய்வின் போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள் அமெரிக்க நாட்டின் வட மாகாணம் மியாமி நகரில் அமைந்துள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு பெறப்பட்ட ஆய்வு முடிவுகள் நூலாக இன்று வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வு முடிவுகளின்படி கி.மு 6-ம் நூற்றாடு முதல் கி.பி.1-ம் நூற்றாண்ட்டு வரை வளமையான பண்பாடு கொண்ட பகுதியாக கீழடி விளங்கியுள்ளது எனத் தெரியவந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் நகரமயமாதல் கி.மு 3-ம் நூற்றாண்டு வாக்கில்தான் தொடங்கியது என இதுவரை கருதப்பட்ட வந்த நிலையில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள சான்றுகளின் மூலம் கி.மு. 6-ம் நூற்றாண்டிலிருந்தே தொடங்கிவிட்டது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Loading...

கீழடி அகழாய்வில் தமிழ்-பிராமி பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் குவிரன் ஆதன், ஆதன் போன்ற பெயர்களும் முழுமை பெறாத சில எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளும் கிடைத்துள்ளதால் தமிழ் பிராமியின் காலகட்டம் கிமு 6-ம் ஆண்டு எனத் தெரிய வந்துள்ளது. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 70 எலும்புத்துண்டுகள் புனேவிலுள்ள டெக்கான் கல்லூரிக்கு அனுப்பி ஆய்வு செய்ததில் திமிலுள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு ஆகிய விலங்கிணங்களின் எலும்புகளாக கண்டறியப்பட்டதால் சங்க காலச்சமூகம் வேளாண்மையையும், கால் நடை வளர்ப்பையும் முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

பெருங்கற்கால மற்றும் இரும்புக் கால மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எழுத்து வடிவமாக விளங்கியதும் தமிழ் பிராமிக்கு முந்தைய வடிவமாக விளங்கிய குறியீடுகள் கீழடி அகழாய்வில் 1001 பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடியில் ரோம் நாட்டை சேர்ந்த அரிட்டைன் பானை ஓடு கிடைத்துள்ளதால் நாட்டினருடன் வாணிபம் மேற்கொண்டதற்கு இது சான்றாக உள்ளது.

பெரியவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாடும் சதுரங்க விளையாட்டில் பயன்படும் பல்வேறு அளவிலான சதுரங்க காய்கள் கிடைத்துள்ளது. பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் தங்கத்திலான ஏழு ஆபரணத் துண்டுகள், செம்பு அணிகலன்கள், 4000க்கும் மேற்பட்ட கல்மணிகள், கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளதன் மூலம் சங்ககால சமூகம் வளமையுடன் இருந்திருப்பது தெரியவந்துள்ளது.

கீழடியில் உள்ள கட்டுமானப் பொருட்களை ஆய்வுக்குட்படுத்தியதில் செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கட்டுமான அமைப்புகள் சங்க காலத்தில் நிலவிய வளர்ந்த சமூகத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

கீழடியில் கிடைக்கப்பெற்றுள்ள பெரும்பாலான தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள் பானை செய்யும் போதே எழுதப்பட்டதாக இல்லை. பானை வனைந்து முடித்த பின்னர் பொறிக்கபப்ட்ட்ட எழுத்துகளாக உள்ளதாகவும் கிடைக்கப்பெற்ற எழுத்துகளின் எழுத்து வடிவம் வெவ்வேறாக உள்ளதால் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் பரவலாக கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

மொகஞ்சதாரோ நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட பல சுவடுகள் கீழடியில் கிடைத்துள்ளதால். இதை பிரதமரின் பார்வைக்கு நிச்சயம் கொண்டு செல்வோம் எனக் கூறினார்.
மேலும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மதிப்புறு அணிகலன்கள், விளையாட்டு பொருட்கள், அரவைக் கல், கவினைப் பொருட்கள்,சுடுமண் உருவங்கள், நாணயங்கள், நெசவு பொருட்கள் ஆகியவற்றின் மூலம் நன்கு கல்வியற்வு பெற்ற நாகரிக பண்பாட்டுடன் அங்கு மக்கள் வாழ்ந்ததாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

தற்போது வரை கிடைக்கப்பட்ட பொருட்களை வைத்துப் பார்க்கையில் கீழடி வளமையான தொழில் செயல்பாடுகள் நிகழ்ந்த ஒரு இடமாக இருக்கலாம் எனவும் அடுத்த ஆண்டு கீழடிக்கு அருகில் உள்ள இடுகாடக கருதப்படும் கொந்தகை மக்கள் வாய்ந்த இடங்களாக கருதப்படும் மணலூர், அகரம் ஆகிய இடங்களை ஆய்வுக்குட்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய ஆய்வு முடிவுகளின் வெளியீடானது சென்னை அருங்காட்சியகத்தில் முன்னறிவிப்பு ஏதுமின்றி கண்காட்சி மற்றும் சொற்பொழிவுத் தொடர் நிகழ்வுகளை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் துவக்கி வைத்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மட்டுமே நடந்தது.

இதுகுறித்து அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு
”கீழடி கையேடு விரைவாக வெளியிட வேண்டும் என்பதற்காக புத்தக வெளியீட்டை எளிமையாக நடத்தினோம். முழுமையான அறிக்கை கிடைக்கும் முன்பாக இதை வெளிப்படுத்தி விட்டால் அறிஞர்கள் அதில் குற்றம் சாட்ட வாய்ப்பு இருக்கிறது. இது தமிழர்கள் நாகரிகம் என்பதோடு மட்டுமில்லாமல் இந்திய நாகரிகமும் சேர்ந்ததுதான் எனவே இதை உலக அரங்கில் கொண்டு சேர்க்க வேண்டியது மத்திய தொல்லியல் துறையினுடைய பொறுப்பும் கூட எனவே அவர்கள் இதை வெளிப்படுத்துவார்கள் என அம்புவதாகவும் இந்த ஆய்வு முடிவுகளை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் கூறினார்.

 

First published: September 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...