அதிமுகவை பிளவுபடுத்த நினைத்து பின்னிருந்து செயல்படுகிறது திமுக என்றும் ஓ.பன்னீர்செல்வம் பின்னால் மன்னார்குடி குடும்பம் உள்ளது எனவும் செய்தியாளர் சந்திப்பில் கூறிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அதிமுகவிற்கு அடுத்த தலைமையாக எடப்பாடி பழனிசாமி தான் வர வேண்டும் என்றார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், அதிமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவினர் சார்பில் வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரபதிவுதுறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் அவசர செயற்குழுக் கூட்டம் நடைப்பெற்றது.
இதில், மாவட்டம் முழுவதும் உள்ள அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் எனவும், எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவிற்கு தலைமை ஏற்று நடத்த வேண்டும் எனவும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் வணிக வரித்துறை மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சர் வீரமணி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.சி வீரமணி பேசியதாவது, மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒருமனதாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மேலும், அதிமுகவை பிளவுபடுத்தி பார்க்க திமுக நினைக்கிறது அதற்காக தொந்தரவு கொடுத்து பின்னிருந்து செயல்படுகிறது அது ஒரு போதும் நடக்காது.
அதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நன்றாக இருக்க வேண்டும் ஒ.பன்னீர்செல்வமும் பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பார். மேலும் தற்போது ஒற்றை தலைமையின் அவசியம் ஏற்பட்டுள்ளது. இரட்டை தலைமையில் இருந்தால் ஒருவருடைய முடிவு மற்றொருவர் ஏற்கமாட்டார். இது எதிரிகளுக்கு சாதகமாக இருக்கும்.
இதற்கு ஒற்றை தலைமைதான் அவசியம். மேலும் புகழேந்தியை கட்சியில் சேர்த்து தொண்டர்களின் வெறுப்பை பெற்றுள்ளார் பன்னீர்செல்வம். அவரது மகனும் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக நல்லாட்சி நடத்துகிறது எனக்கூறுகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கே.சி.வீரமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள்
ஓ.பி.எஸ் எத்தனை உயர்மட்ட குழு அமைத்தாலும் எடப்பாடியார் தான் ஒரே தலைவர். ஓபிஎஸ் பின்புலத்தில் மன்னார் குடும்பம் உள்ளது. மேலும் தமிழகத்தில் 99% சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிச்சாமியிற்கு தான் ஆதரவு தெரிவிக்கின்றனர் என்று கூறினார்.
Must Read : அமைதியான சூழல் இல்லை: பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடிக்கு கடிதம்
இந்தக் கூட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி சம்பத்குமார் மற்றும் மாவட்டத்தில் உள்ள நகர ஒன்றிய மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் - M.வெங்கடேசன், திருப்பத்தூர். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.